மயானம் இல்லாமல் 30 ஆண்டுகளாக தவிக்கும் பட்டியல் இன மக்கள்

Update: 2023-12-10 03:44 GMT

சாலை வசதி இல்லாத மயானம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள் ளம்பாடி ஒன்றியம் இடங்கிமங்கலம் வெள்ளனூர் ஊராட்சியில் உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கு தனியாக மயானம் மற்றும் மயானத்திற்கு செல்லும் சாலை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என கூறப்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர், தன்னிடம் வேலை பார்த்த மக்களுக்காக தனது வயல் பகுதியில் மயானம் ஒதுக்கித் தந்துள்ளார். மேலும் அந்த மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாததால்,மற்றொருவரின் வயல் வழியாக இறந்தவர்களின் உடலை பொதுமக்கள் கொண்டு சென்று அடக்கம் செய்து வந்தனர். ஆனால் தற்போது அவரது பேரன்கள், இறந்தவர்கள் உடலை தங்கள் வயல் வழியாக கொண்டு செல்லக்கூடாது என்றும். அந்த இடத்தை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளனர். இதனால் ராமநாதபுரம் கிராமத்தில் வசிக்கும் பட்டியல் இன மக்கள் தங்களுக்கு மயானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருமாறு அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளனர்.

மேலும் ராமநாதபுரத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே அரசு அந்த இடத்தை மீட்டு. இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்வதற்கு தனியாக மயானம் வழங்க வேண்டும், என்று கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று ராமநாதபுரத்தை சேர்ந்த 70 வயதான மூதாட்டி ஒருவர் இறந்துவிட்டார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக, நெற்பயிர் நடவு செய்த வயல் வழியாக உறவினர்கள் சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.அப்போது வயலின் உரிமையாளர், அந்த வழியாக உடலை கொண்டு செல்லக் கூடாது என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த லால்குடி வட்டாச்சியர் விக்னேஷ், இடங்கிமங்கலம் மற்றும் சிறுமயங்குடி கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜா மற்றும் அந்தோணிராஜ் ஆகியோரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார். அவர்கள், வயல் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த முறை அனுமதியுங்கள்.விரைவில் மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம நிர்வாக அலுவலர்கள் கூறியதை தொடர்ந்து, இறந்தவரின் உடல் வயல் வழியாக கொண்டு செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News