திருப்பூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை
திருப்பூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை. தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுமைப் பெண் திட்டம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த 2022-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கமானது, பெண் கல்வியை ஊக்குவிப்பதே ஆகும். அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயின்று வரும் அனைத்து மாணவிகளும், உயர்கல்வி படிப்பில் சேர்ந்த முதல் மாதத்தில் இருந்து மாதந்தோறும் ரூ. 1000-ம் வீதம்,
அவர்களின் வங்கிக்கணக்குக்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் உயர்கல்வி பயிலும் மாணவிகள் தொடர்ந்து கல்லூரி படிப்பை இடைநிற்றல் இன்றி நிறைவு செய்வதாகவும், கல்லூரி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை மாவட்டத்தில் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
மேலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணையில் 2024-25-ம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழிக்கல்வியில் பயின்று மேற்படிப்பில் சேரும்,அனைத்து மாணவிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் 2023-24-ம் கல்வி ஆண்டில் திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 7,934 மாணவிகள் தேர்வு எழுதி,
அதில் 7,709 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே மாணவிகள் அனைவரும் உயர்கல்வி பெறுவதுடன், தகுதியான மாணவிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.