பள்ளி பேருந்து - லாரி மோதல்

ஓசூர் அருகே தனியார் பள்ளி பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக பேருந்தில் பள்ளி மாணவர்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Update: 2024-02-16 01:59 GMT

ஓசூர் அருகே தமிழக எல்லைப்பகுதியில் உள்ள சிச்சுருகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கர்நாடகாவில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளி மாணவர்களை ஏற்றி செல்ல தனியார் பள்ளியின் பேருந்து இன்று காலை சிச்சுருகானப்பள்ளி கிராமத்திற்கு சென்றுள்ளது. அப்போது கிராமத்தில் தனியார் பள்ளி பேருந்துக்கு எதிரே வந்த டேங்கர் லாரி ஒன்று தனியார் பள்ளி பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர் மகேஷ் என்பவர் இலேசான காயமடைந்தார். மேலும் தனியார் பள்ளி பேருந்தில் குழந்தைகளை ஏற்றவும் இறக்கவும் உதவியாளராக பணியாற்றி வரும் கௌரம்மா என்பவர் காயங்கள் இன்றி உயிர்தப்பினார்.

விபத்து நடந்த நேரத்தில் பள்ளி பேருந்தில் மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருந்தபோதும் இந்த விபத்தில் சாலை ஓரத்தில் இருந்த ஒரு வீடு இரண்டு கழிவறைகள் இடிந்து சேதமடைந்தது. இதுகுறித்து பாகலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்து திட்டமிட்டு ஏற்படுத்திய விபத்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளி பேருந்தில் பணியாற்றி வரும் கௌரம்மா, டேங்கர் லாரி ஓட்டுநர் லட்சுமண கவுடா என்பவரின் மனைவி ஆவார், இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. மனைவியை விபத்தை ஏற்படுத்தி கொலை செய்ய லட்சுமண கவுடா முயன்றாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News