நாளை பள்ளிகள் திறப்பு: பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
நாளை பள்ளிகள் திறப்பை ஒட்டி சேலத்தில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் நாளை (திங்கட்கிழமை) அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இதனால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான சீருடை, நோட்டு, புத்தகம், புத்தக பைகள் (பேக்குகள்) காலணி, ஷூ மற்றும் எழுது பொருட்கள் போன்ற கல்வி உபகரணங்களை வாங்குவதற்கு நேற்று சேலத்தில் உள்ள ஸ்டேசனரி பொருட்கள் விற்பனை கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக டி.வி.எஸ். பஸ் நிறுத்தம், பழைய பஸ் நிலையம், புதிய பஸ்நிலையம் எதிரில், கோட்டை பெருமாள் கோவில் செல்லும் வழி, சுவர்ணபுரி, அழகாபுரம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புத்தக பைகள் (பேக்குகள்) விற்பனை கடைகளில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு பேக்குகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர்.
இதனால் அனைத்து கடைகளிலும் ஸ்கூல் பேக் விற்பனை மும்முரமாக நடந்தது. பள்ளிக்கூடம் நாளை திறப்பதையொட்டி மாணவ, மாணவிகளுக்கு தேவையான பல்வேறு பொருட்களை வாங்குவதற்கு பெற்றோர்கள் குடும்பத்தினருடன் ஷாப்பிங் சென்றதால் சேலத்தில் நேற்று இரவு புதிய பஸ்நிலையம்,
4 ரோடு, 5 ரோடு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், கடைவீதியில் உள்ள ஜவுளி கடைளிலும் பள்ளி சீருடை விற்பனை ஜோராக நடந்தது.