நாகை விவசாயிகள் கைது - எஸ்டிபிஐ கண்டனம்

நாகை மாவட்டம் பனங்குடி சிபிசிஎல் நிறுவன நில எடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.;

Update: 2024-05-11 15:22 GMT

நெல்லை முபாரக்

 நாகை மாவட்டம் பனங்குடி சிபிசிஎல் நிறுவன நில எடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாகை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் தற்போது விரிவாக்கப் பணியை மேற்கொண்டுள்ளது. இதற்காக பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம், முட்டம், சிறுநங்கை உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் 620 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

ஆனால், சிபிசிஎல் நிறுவன விரிவாக்கப் பணிக்கான நில எடுப்பில் மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டு தொகை கடந்த நான்கு ஆண்டுகளாகியும் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிடக்கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் சார்பில் கடந்த 11 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்காமல் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அளவீடு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நரிமணம் பகுதியில் நிலங்களை அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் மற்றும் வாகனங்களை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விவசாயிகளின் ஒப்புதல் இன்றி நிலங்களை கைப்பற்றி விட்டு, அந்த நிலங்களுக்குரிய இழப்பீட்டு நிவாரணத் தொகையை வழங்காமல் இழுத்தடித்து வரும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

உடனடியாக கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களை விடுதலை செய்திட வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் நில உரிமைதாரர்கள் கோரிக்கையின் படி, மத்திய நில எடுப்பு சட்டம் 30/2013 - இன் படி வழங்க வேண்டிய மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பிட்டுத் இழப்பீட்டுத் தொகையை நான்கு வருடங்களாக வழங்காமல் இருந்து வருவதை உடனடியாக வழங்கிட வேண்டும்" என அவர் அந்த தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News