சோப்பு திரவம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு ‘சீல்’
திருச்சியில் அனுமதியின்றி இயங்கிய சோப்பு திரவம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு, மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
By : King 24x7 Angel
Update: 2024-02-03 06:00 GMT
திருச்சி மாநகராட்சி 26-ஆவது வாா்டு குமரன் நகா், சிவன் கோயில் தெரு குடியிருப்பு பகுதியில் தனியாா் நிறுவனம் ஒன்று சோப்பு திரவம், சலவை வேதிப்பொருள்கள் போன்றவற்றை தயாரித்து, கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது. இதனருகே வசிக்கும் குடியிருப்பாளா்கள், நிறுவனத்திலிருந்து வரும் வேதிப்பொருள்களின் நெடி தாங்க முடியவில்லை என மாநகராட்சிக்கு புகாா் அளித்தனா். இதன்பேரில், மாநகராட்சி ஆணையரின் உத்தரவுப்படி, சுகாதார ஆய்வாளா் அங்கு சென்று ஆய்வு செய்து, மாநகராட்சியின் வணிக உரிமமின்றி இயங்கிய அந்நிறுவனத்தின் வேதிப்பொருள்களில் இருந்து நெடி எழுவதைக் கண்டறிந்து, அந்த நிறுவனத்தை குடியிருப்புப் பகுதியிலிருந்து அகற்றி, வேறிடத்தில் மாற்றிக்கொள்ள அறிவிப்பு வழங்கப்பட்டது. இதனை அந்த நிறுவனம் செய்யவில்லை. இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் ஆய்வு நடத்தியதில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதியின்றி இத்தொழில் நடைபெறுவதால், மேல்நடவடிக்கை தொடர கடிதம் அளிக்கப்பட்டது. இதையேற்று மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன், மாநகா் நல அலுவலா் தி. மணிவண்ணன் ஆகியோரின் உத்தரவின்படி, வட்டாட்சியா் ராஜவேல், விஏஓ ஸ்டீபன், மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் ஆல்பா்ட் உள்ளிட்டோா் போலீஸ் பாதுகாப்புடன் சென்று அந்த நிறுவனத்தை வெள்ளிக்கிழமை மூடி சீல் வைத்தனா்.