போக்குவரத்து விதிகளை மீறிய இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
குளச்சலில் சாலை விதிகளை மீறி இயக்கப்பட்ட இருசக்கர வாகனங்ககளை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.;
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுடன் போலீசார்
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தொடர்ச்சியாக சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள். உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடைபெற்று விதிமுறைகளில் ஈடுபடும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது.
இந்நிலையில் நேற்று , குளச்சல் உட்கோட்ட போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோட்டியோடு சந்திப்பு பகுதியில் குளச்சல் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாகவும், அதிக சத்தம் எழுப்பும் சைலன்ஸர்களை பொருத்தியும், அரசால் அனுமதிக்கப்படாத அளவு மற்றும் எண்களின் வடிவம் கொண்ட நம்பர் பிளேட்டுகளை பொருத்தி வந்த இருசக்கர வாகனங்களுக்கு தலா 11,000/- ரூபாய் அபராதம் விதித்து, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நடவடிக்கை தீவிர படுத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.