கஞ்சா விற்பனை - வட இந்திய தொழிலாளர்கள் கைது
காங்கேயம் மற்றும் வெள்ளகோவிலில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வட இந்திய தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
காங்கேயத்தை அடுத்த படியூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த அலிகார் அலம் (வயது 23) என்பவன் வேலை பார்த்து வருகிறார். இவர் சமீப காலமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் மீனாட்சிபாளையத்தில் அவர் தங்கி இருந்த வீட்டில் சோதனை செய்ததில் 200 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் வெள்ளகோவில் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் நேற்று நகர் பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது காங்கேயம் சாலை பழைய பஸ் நிலையம் அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் நடமாடிக் கொண்டிருந்தனர் விசாரித்துக் கொண்டிருந்தபோது அங்கிருந்து ஒருவர் நழுவி செல்ல முயன்றார். அவரை பிடித்து விசாரித்த போது அவரிடம் கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சன்னியாசி (வயது 30) என்பதும் வெள்ளகோவில் வீரசோழபுரத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 280 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.