சாத்தூர் ஸ்ரீஎஸ் ராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரியில் கருத்தரங்கம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரியில் உலகத் தாய்மொழி தின விழா கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2024-02-22 13:44 GMT

சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து நடத்திய உலகத் தாய்மொழி தின விழா கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், தலைமையில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் "தமிழ் - நேற்று இன்று நாளை " என்ற தலைப்பில் பேசினார்:- மொழி மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிக மிக உயர்ந்தது. பொதுவாக கண்டுபிடிப்புகள் என்பது மறைந்திருக்கும் ஒரு மறைபொருளை கண்டளிப்பது அல்லது புதிதாக ஒன்றை உருவாக்குவது. அமெரிக்காவை கண்டுபிடித்தார்கள் என்றால் மறைந்திருந்த ஒரு இடத்தை சென்று கண்டுபிடித்தார்கள்.

மின்சாரம் உருவாக்கப்பட்டது என்றால் மின்சாரம் உருவாவதற்கு தேவையான அறிவியலின் தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. மொழி இந்த இரண்டிலும் மேம்பட்டது. மொழி எப்படி உருவாகிறது. ஆதியில் ஒலி சப்தமாக உருவாகியது என்று எல்லா சமய இலக்கியங்களிலும் குறிப்பிடுகின்றனர். மொழி எதற்காக உருவாகி இருக்கக்கூடும். மனிதன் தன்னை ஆபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகத்தான் மொழி உருவாகி இருக்கக்கூடும்.

மனிதன் காடுகளில் விலங்குகளோடு வாழ்ந்த போது, தன்னுடைய அபய குரலை எழுப்புவதற்காக மொழி உருவாகி இருக்கக்கூடும். அதனால் தான் பல தமிழ்ச் சொற்களை நாம் உச்சரிக்கும் போது, அடிவயிற்றில் இருந்து எழுப்பக் கூடியதாக இருக்கும். அடிவயிற்றில் இருந்து எழுப்பக் கூடிய ஒலி தான் சப்தமாக மாறி வார்த்தைகளாக உருவாகி புதிய, புதிய பதங்களை நமக்கு சொல்லி தருகிறது. அப்படிப்பட்ட மொழி தான் மனிதர்களை அபயகுரலை எழுப்புவதற்காகவும், தன்னுடைய நாகரிக மேம்பாட்டிற்காகவும், அவனோடு இயைந்து பயணித்ததாம். மனிதனின் மிகப்பெரிய சவால் என்பது பூமியில் உயிரோடு வாழ்வது தான். கொரோனா காலக்கட்டம் நமக்கு இதை உணர்த்தி இருக்கும். எல்லா காலக்கட்டத்திலும் உள்ள வரலாற்று ஆய்வுகளும் இதைத்தான் தெரிவிக்கின்றன.

மனிதனின் ஆகப்பெரிய மிக முக்கியான சவால் என்பது உயிரோடு வாழ்வது தான். இன்றைய காலக்கட்டத்தில் நாம் ஏன் கல்வி பயின்று, வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்கிறோம் என்றால், மிக மிக அடிப்படையாக இருக்க கூடிய உணவை பெற்று நாம் உயிர் வாழ்வதற்கு தான். நாம் உயிரோடு இருப்பது தான் மனிதனுடைய மிக முக்கியமான தேவையும்,

அதற்கான செயல்பாடும் அதை நோக்கித்தான் அமையும். அப்படி உயிர்வாழ்வதற்கு மனிதன் வாழும்போது எவற்றையெல்லாம் கண்டறிந்தானோ, அதை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் அவனுக்கு உள்ளது. அதனால் தான் அவன் எழுதி வைக்கிறான். எழுதுவதற்கு ஒரு வடிவம் வேண்டும்.

அதை எடுத்துச் சொல்வதற்கு ஒரு ஒலி வடிவம் வேண்டும். இப்போது எல்லாம் நாம் புத்தகங்களை படிக்கிறோம். இதற்கு முன்பாக இத்தனை மில்லியன் ஆண்டுகள், வரலாற்றை இந்த பூமியில் எதை, எங்கே எழுதி வைத்தார்கள். இன்று நாம் தாய்மொழியை போற்றுகிறோம். தாய்மொழியின் செல்வங்களை எல்லாம் நாம் அனுபவிக்கிறோம். இந்த மொழி தரும் செல்வங்கள் என்பது நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாதது. இன்றைய காலக்கட்டத்தில் நாம் நிறைய படிக்கிறோம். புறநானூறு, அகநானூறு படிக்கிறோம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தத்துவம் எங்கள் மொழியில் இருந்து வந்தது என்று கூறுகிறோம். வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் எங்கள் மொழியில் இருந்து வந்தது என்று உயர்வாக கூறுகிறோம். இத்தனை இலக்கிய செல்வங்கள் நமக்கு வழிகாட்டுகின்றன. நாம் தோல்வியுறும் போது நம்மை தாங்கிப் பிடிக்கின்றன. சக மனிதன் அழுகின்ற போது, அவனுக்கு ஆறுதல் சொல்கின்றன. இப்படிப்பட்ட தமிழ் மொழியில் உள்ள உயர்ந்த இலக்கியங்கள் எல்லாம்,

எந்த காலக்கட்டத்தில் நம் கைகளில் வந்திருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் நாம் அதிகம் நினைத்து, தமிழர்களில் ஒருவருக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றால் முதலில் உ.வே சாமிநாத ஐயர் என்ற மகத்தான மனிதருக்கு தான். உ.வே சாமிநாத ஐயர் மட்டும் இந்த பணியை செய்யாது போயிருந்தால், இன்று நாம் படிக்கும் எந்த இலக்கியமும் நம் கையில் இல்லை. முந்தைய காலங்களில் திருக்குறளை படித்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. ஏனென்றால் அச்சு ஊடகங்கள் அந்த காலக்கட்டங்களில் இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவான திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்கள் எப்போது நம் கைகளில் வந்திருக்கும். இன்றைய காலகட்டத்தில் திருக்குறளையும், சங்க இலக்கியத்தையும் நாம் படித்து அறிந்து தெரியக் கூடிய சூழல் உள்ளது. அதற்கு மிக மிக முக்கியம் சமூக புரட்சியோடு,

அச்சு புரட்சியும், தமிழ் அறிஞர்கள் ஆற்றிய தொண்டும் தான். இதே போல் ஒரு சூழ்நிலை 150 ஆண்டுகளுக்கு முன்னர் இல்லை. உ.வே.சா அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை படித்தால், எப்படி இந்த இலக்கியங்களை எல்லாம் தேடி கண்டறிந்தார் என்பது புரியும். அதற்கு முன்பாக வீடுகளில் ஓலை சுவடிகளில் நமது இலக்கியங்களை பாதுகாத்து வைத்திருப்பார்கள். இன்னும் கூட கண்டறியப்படாத இலக்கியங்கள் எத்தனையோ இருக்கக்கூடும்.

குறிப்பாக இன்றைய காலக்கட்டத்தில் நவீன ஊடகங்கள் வழியாக நம் தமிழை கொண்டு செல்வது சற்றே அதிகரித்து இருந்தாலும், ஒப்பீட்டு அளவிலே எப்படி இருக்கிறது என்று பார்த்தால், இன்று மிக முக்கியமான சவாலாக இருப்பது, தமிழ் எழுத்துகளில் ஆங்கில சொற்களை அப்படியே எழுதுவதுதான். இன்றைய காலக்கட்டத்தில் ஆங்கில எழுத்தில், தமிழை எழுதுவதுதான் பல நபர்களுக்கு எளிதாக உள்ளது. தேவனேய பாவனார், மறைமலை அடிகளார், பரிதிமாற் கலைஞர் ஆகியோர் புதிய தமிழ் சொற்களை கண்டறிவதில் மிகப்பெரிய வெற்றியை கண்டார்கள்.

இப்பொழுது நடைமுறையில் நிறைய பிறமொழி சொற்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. வடமொழி கலப்போடு பிறமொழி கலப்பை தாண்டி தாய் தமிழுக்கென ஒரு இயக்கம் உருவாகி, இந்த சொற்களுக்கெல்லாம் இணையான தமிழ்ச்சொற்கள் உருவாக்கப்பட்டதோ, அதே காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோமா என்பதை கேள்வி எழுப்பிற காலத்தில் நாம் இன்று இருக்கிறோம். இப்பொழுதிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்னால் அப்போது இருந்த அரசு சொல்லாடல்களிலும், ஆட்சிமொழி வழக்குகளிலும் பிற மொழி கலப்புகள் மிக மிக அதிகமாக இருந்தது. அவற்றை எல்லாம் தாண்டி, தாய்தமிழுக்கென்று ஒரு இயக்கம் உருவாகியது. இதுபோன்ற தமிழ் இயக்கங்கள் தான், இது போன்ற கலப்பு தமிழ் சொல்லுக்கு, ஒரு அழகிய தமிழ்ச்சொற்களை கொண்டு வந்து தந்தன. இதை நாம் பெருமையாக பேசவில்லை. ஐரோப்பிய நாடுகளில் இருந்து, 150 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கு வந்த கார்ல்டுவெல் மிகப்பெரிய ஆய்வை செய்தார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற ஆய்வில் தான் மிக மிக முக்கியமான ஒரு ஆய்வை அறிவியல் பூர்வமாக, தர்க்க ரீதியாக, தரவுகளோடு நிருபித்தார். திராவிட மொழிகளில்,

தமிழுக்கு மட்டுமே தனித்து இயங்கக் கூடிய ஆற்றல் உள்ளது என்பதை நிருபித்தார். பிற மொழிச் சொற்களை எடுத்து விட்டாலும், ஒவ்வொரு சொற்களுக்கும், தனித்தமிழ் சொற்கள் உள்ளன. தனி தமிழ்ச்சொற்களை உருவாக்க முடியும். அதன் மூலமாக தமிழ் தனித்து இயங்க முடியும் என்பதை அறிவியல் பூர்வமாக தரவுகளோடு நிருபித்தார். இன்று எந்த ஒரு அறிவியல் பதத்திற்கும் தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. நேற்று வந்த அறிவியலுக்கும் இன்று தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கென்று தமிழ்நாட்டில் தனித்துறையே இருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் அகர முதலி திட்டம் என்ற புதிய கலைச்சொற்களை உருவாக்குவதற்கு தனித்துறை உள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.

Tags:    

Similar News