தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,006 வழக்குகளில் ரூ.14.54 கோடிக்கு தீர்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 6 வழக்குகளில் ரூ.14.54 கோடி அளவுக்கு தீர்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.;

Update: 2024-06-10 02:33 GMT

பைல் படம் 

தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீர்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.  இந்நிகழ்வுக்கு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான கே.பூரண ஜெயஆனந்த் தலைமை வகித்தார்.

கூடுதல் மாவட்ட நீதிபதி ஜி.சுந்தரராஜன், குற்றவியல் விரைவு நீதிமன்ற நடுவர் டி. சோழவேந்தன், வழக்குரைஞர் ஆர். திராவிடசெல்வன் ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் குடும்ப நல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. சிறப்பு மாவட்ட நீதிபதி எம். வடிவேலு, இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ்.ராஜேஸ் கண்ணன், வழக்குரைஞர் கே.சுந்தரமூர்த்தி ஆகியோர் கொண்ட இரண்டாவது அமர்வில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. கூடுதல் சார்பு நீதிபதி எம். முருகன், மாவட்ட உரிமையியல் நீதிபதி டி. பாரதி, வழக்குரைஞர் என். மகாலட்சுமி ஆகியோர் கொண்ட மூன்றாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Advertisement

இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய வட்டச் சட்டப் பணிகள் குழுவின் அமர்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது. இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 930 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 2 ஆயிரத்து 6 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.14 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 416 அளவுக்கு தீர்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான சி.ஜெயஸ்ரீ, முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சத்யதாரா,  மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான எஸ். இந்திராகாந்தி, தஞ்சாவூர் வழக்குரைஞர் சங்கத் தலைவர் தியாக.காமராஜ், செயலர் சுந்தரராஜன், ஆணைக் குழு நிர்வாக அலுவலர் பி. சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News