வல்லம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் தட்டுப்பாடு?

வல்லம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளதா என உயர் மருத்துவ அலுவலர்கள் ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2024-04-24 13:40 GMT

வல்லம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயர் மருத்துவ அலுவலர்கள் ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான மாத்திரைகள் இல்லாததால் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். வல்லத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு வல்லம் மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் அதிகமான கிராம மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். ஏழை, நடுத்தர மக்கள் சிகிச்சை பெற வேண்டுமானால் அரசு மருத்துவமனையை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது.

அதிலும் குறிப்பாக உயிர் காக்கும் மாத்திரைகளான உயர் ரத்த அழுத்த நோய்க்கான மாத்திரை, நீரிழிவு நோய்க்கான மாத்திரைகள் இல்லை. இதனால் இங்கு வரும் நோயாளிகளை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று மாத்திரைகள் வாங்கிக்கொள்ளுமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி அனுப்பி வைக்கின்றனர். எனவே நோயாளிகள் மாத்திரை கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் வல்லத்தில் இருந்து 5 கி.மீ.தொலைவில் உள்ள மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு துணையில்லாமல் முதியோர்கள் சென்று வருவதில் சிரமம் உள்ளதால் மாத்திரை வாங்க முடியாமல் வீட்டுக்கு திரும்பி விடுகின்றனர். எனவே மாவட்ட சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News