எஸ்.ஐ., குடும்பத்துக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும்

மறைந்த தக்கலை சிறப்பு எஸ்.ஐ., ஜஸ்டின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-02-17 06:13 GMT

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-         குமரி மாவட்டம் தக்கலை போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜஸ்டின் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சென்றபோது கனிம வளங்கள் கடத்தும் டாரஸ் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.        கடந்த ஒரு மாத காலத்தில் கனிம வளக் கடத்தல் லாரிகளால் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் ஜஸ்டினுனும் சேர்ந்துள்ளார். எனினும் தமிழ்நாடு அரசும், மாவட்ட அமைச்சர்  மனோ தங்கராஜும்  சிறிது கூட கவலைப்படாமல் டாரஸ் லாரிகளை தொடர்ந்து அனுமதிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.        

கனிமவளக் கடத்தல் டாரஸ் லாரிகள் மூலம் ஏற்படும் கடைசி மரணமாக ஜஸ்டின் மரணம் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். கடத்தல் டாரஸ் லாரி விபத்துகளால் இதுவரை கொல்லப்பட்ட தாணுமாலயன் (கனியாங்குளம்), அனிதா (வெண்டலிகோடு), பீனா (குழித்துறை)போன்ற அனைத்து உயிரிழப்புகளுக்கும் தமிழ்நாடு அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்.        காவல்துறை உதவி ஆய்வாளர் ஜஸ்டின் மரணத்திற்கு இழப்பீடாக ரூ. 25 லட்சத்தை தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார்.

 எனவே, உயிரிழந்த ஜஸ்டின் குடும்பத்திற்கு காவல்துறை உதவி ஆய்வாள் என்ற நிலையில் ரூபாய் 50 லட்சம், தமிழ்நாடு அரசின் தவறான அனுமதியால் ஓட்டப்பட்ட டாரஸ் லாரி விபத்து மரணத்திற்காக இழப்பீடாக ரூபாய் 50 லட்சம் ஆக மொத்தம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News