பெண்ணுக்கு ஒரே நேரத்தில் 2 மூட்டுகளும் மாற்று அறுவை சிகிச்சை

Update: 2023-12-14 03:26 GMT

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரி தற்போது தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் அண்மையில் மூட்டு மாற்று சிகிச்சைகள் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று சிகிச்சை நிபுணர் பாலாஜி தலைமையிலான குழுவினர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த 60 வயது பெண்ணிற்கு ஒரே நேரத்தில் 2 கால்களின் மூட்டுகளையும் அறுவை சிகிச்சை மூலம் மாற்றி அமைத்து சாதனை புரிந்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கோகுலகிருஷ்ணன் கூறுகையில்:- தமிழக முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சிறப்பு அறுவை சிகிச்சையின் மூலம் இந்த பகுதி மட்டும் அல்லாமல், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் நோயாளிகளும் பயன்படுத்துகிறார்கள். எடப்பாடி பகுதியைச் சேர்ந்த 56 வயது நபருக்கு ஒரே நேரத்தில் 2 இடுப்பு மூட்டு எலும்புகளையும் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவ குழு மாற்றி அமைத்துள்ளது. இதுதவிர ஆஸ்பத்திரியில் 65-க்கும் மேற்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 7 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து மேற்கொள்ள வேண்டிய இந்த அறுவை சிகிச்சைகள், தமிழக அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். நிகழ்ச்சியில் சிறப்பு டாக்டர்கள் செந்தில் இருசப்பன், பூந்தமிழ், சொப்னா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News