முசிறி அருகே கிணற்றில் மூழ்கி அக்காள்- தங்கை பலி
முசிறி அருகே கிணற்றில் விளையாடிய அக்காள்- தங்கை உயிரிழந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள பாலபட்டி கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி- சசிகலா தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மூத்த மகள் தர்ஷினி (19) துறையூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வந்தார். மற்றொரு மகள் வேம்பு (16) பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார். மகன் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில், சம்பவத்தன்று காலை இவர்களுக்கு சொந்தமான வயலில் நெல் அறுவடை செய்யும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது தாய் சசிகலாவுடன் மூன்று பிள்ளைகளும் சென்றுள்ளனர்.
சசிகலா வயலில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் தர்ஷினியும், வேம்பும் சுமார் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர். அவர்கள் சந்தோஷமாக குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வேம்பு கிணற்றில் மூழ்கியுள்ளார். தங்கை மூழ்குவதை கண்ட தர்ஷினி அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், அவரும் நீரில் மூழ்கினார். இதனை கரையின் மீது நின்று பார்த்துக் கொண்டிருந்த தம்பி லோகேஸ்வரன் உதவிக்கு ஆட்களை அழைத்து சத்தம் போட்டு உள்ளான்.
உடனே, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் கிணற்றில் குதித்து நீரில் மூழ்கிய இருவரும் இருவரையும் தேடினர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி சகோதரிகளை மீட்டனர். ஆனால், அவர்கள் உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. இதையடுத்து முசிறி போலீசார், இருவரது உடல்களையும் உடற்கூறு ஆய்விற்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிணற்றில் மூழ்கி அக்காள், தங்கை உயிரிழந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.