ஒரகடம் சர்வீஸ் சாலையில் பள்ளம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள்கோவில் சர்வீஸ் சாலையில், திடீரென பள்ளம் ஏற்பட்டு, குண்டும் குழியுமாக மாறியது
திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள்கோவில் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில், ஒரகடம் சந்திப்பு அடுத்த சென்னக்குப்பத்தில், சில மாதங்களுக்கு முன் ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள்கோவில் சர்வீஸ் சாலையில், திடீரென பள்ளம் ஏற்பட்டு, குண்டும் குழியுமாக மாறியது. இதனால், சர்வீஸ் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
வாகன ஓட்டிகளின் கோரிக்கையை அடுத்து, நெடுஞ்சாலை துறையினர், கடந்த வாரம் குண்டும் குழியுமான சர்வீஸ் சாலையை சீரமைக்கும் பணிகள் மேற்கொண்டனர். இதற்காக, சர்வீஸ் சாலையின் குறிப்பிட்ட இடத்தில் பள்ளம் தோண்டினர். இந்த நிலையில், பள்ளம் தோண்டப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில், சாலை சீரமைப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால், போக்குவரத்து அதிகமாக உள்ள ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள்கோவில் சர்வீஸ் சாலையில் உள்ள பள்ளத்தால், தினமும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், தடுப்புகள் இல்லாததால், பள்ளத்தில் விழுந்து, காயமடைந்து வருவது தொடர்கதையாகி உள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், குறிப்பிட்ட இடத்தில் உரிய தடுப்பு அமைப்பதுடன், சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.