பழுதான கார்கள் நிறுத்துமிடமாக மாறிய சமூகநலக்கூடம் -புனரமைக்க கோரிக்கை
வளசரவாக்கம் விவேகானந்தர் தெருவில் உள்ள சமூக நலக்கூட கட்டடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது.
Update: 2023-12-26 08:17 GMT
வளசரவாக்கம் மண்டலம், 147வது வார்டு விவேகானந்தர் தெருவில், மாநகராட்சி வார்டு அலுவலகம் எதிரே, மாநகராட்சி சமூக நலக்கூடம் உள்ளது. பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இந்த சமூக நலக்கூட கட்டடம் கட்டப்பட்டது. இதில் அப்பகுதி மக்கள், தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை குறைந்த வாடகையில் நடத்தி வந்தனர். இந்நிலையில், மதுரவாயல் வருவாய் வட்டம் பிரிக்கப்பட்ட போது, இந்த சமூக நலக்கூடத்தில் மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன், நொளம்பூர் பகுதியில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு, சமூக நலக்கூடத்தில் இயங்கி வந்த வட்டாட்சியர் அலுவலகம், புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பின், சமூக நலக்கூடத்தை பராமரிக்க, மாநகராட்சி முன்வரவில்லை. தற்போது, சமூக நலக்கூடம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பழுதடைந்துள்ளது. இங்கு, மாநகராட்சி சார்பில் சேகரமாகும் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. இதுகுறித்து செய்தி வெளியானதையடுத்து, குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது. தற்போது, தனியார் மெக்கானிக் கடைகள், பழுதான கார்களை நிறுத்தும் வளாகமாக இவ்விடம் மாறி உள்ளது. இந்த கட்டடத்தை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.