குமரி மலைகிராமங்களில் சோலார் மின்இணைப்பு - கலெக்டர் துவக்கினார்
78 மலைவாழ் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது
Update: 2023-12-15 02:59 GMT
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டம் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட 6 காணி மலைவாழ் குடியிருப்பு பகுதிகளில் மின் இணைப்பு வழங்க முடியாத பல பகுதிகள் உள்ளன. மின்இணைப்பு வழங்க முடியாத பகுதிகளை அடையாளம் கண்டு, அவற்றில் மாறாமலை, முகலியடிமலை, புதுப்பாறை, வேட்டாவிளை, களப்பாறை, புன்னமூட்டுதேரி ஆகிய 6 கிராமங்களை சார்ந்த 78 குடும்பங்களுக்கு சென்று சோலார் மின்இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று துவக்கி வைக்கப்பட்டது. மொத்தம் ரூ.13.53 இலட்சம் மதிப்பில் 78 மலைவாழ் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த சோலார் மின் இணைப்பு தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படக்கூடியதாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என். ஸ்ரீதர் தொடக்கி வைத்தார். மாவட்ட வன அலுவலர் திரு.இளையராஜா, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக், மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.