தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கர்நாடகத்திடமிருந்து காவிரி நீர் பெற்றுத் தரக் கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-09 16:07 GMT

சாலை மறியல் 

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் மாதந்தோறும் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசும், உத்தரவை நிறைவேற்ற மத்திய அரசும் மறுக்கிறது. எனவே, தண்ணீர் விடாத கர்நாடகத்திடம் ரூ. ஒரு லட்சம் கோடி இழப்பீடு பெற உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுக்க வேண்டும். காவிரி நீரின்றி சாகுபடி செய்ய முடியாத விவசாயிகளும், சாகுபடி செய்து தண்ணீரின்றி அழிந்துவிட்ட பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. அய்யாக்கண்ணு தலைமையில் துணைப் பொதுச் செயலர் வி. தங்கமுத்து, மாநிலச் செயலர்கள் எம். மகேந்திரன், சாமி. மனோகரன், மன்னார்குடி கோவிந்தசாமி, காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர், தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச் சங்க மாவட்டச் செயலர் வி.கே. சின்னதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக சங்க நிர்வாகிகள் முயற்சி செய்தனர்.

இதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்ததால், அதிருப்தியடைந்த சங்கத்தினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் 2 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவர்களைக் காவல் துறையினர் சமாதானப்படுத்தி உள்ளே செல்ல அனுமதித்தினர். இதையடுத்து, ஆட்சியர் கார் நிறுத்துமிடத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் மனு அளித்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News