பண்ணைசாரா கடன்களுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்
கள்ளக்குறிச்சியில் பண்ணைசாரா கடன்களுக்கான சிறப்பு கடன் தீர்வு முகாம் இன்று நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பண்ணைசாரா கடன்களுக்கான சிறப்பு கடன் தீர்வு முகாம் இன்று 2ம் தேதி நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன் செய்திக்குறிப்பு: கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் நிலுவையில் உள்ள பண்ணைசாரா கடன் மற்றும் இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்காக 'சிறப்பு கடன் தீர்வு திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது, கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விளை பொருட்கள் கொள்முதல் செய்தும், கடன் சங்கம் மற்றும் வங்கியில் கடன் பெற்று கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் காலக்கெடு முடிந்து, கடனை திருப்பி செலுத்தாமல் நிலுவையில் உள்ள அனைத்து கடன்களும் பண்ணை சாரா கடன்களாகும். இதையொட்டி, சிறப்பு கடன் தீர்வு திட்டத்தை செயல்படுத்தும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு கடன் மற்றும் விற்பனை சங்கம், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, நகர கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கம், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இன்று 2ம் தேதி ஒரு நாள் மட்டும் தீர்வு முகாம் நடக்கிறது.
இதன் மூலம் கடன்தாரர் தனது நிலுவை தொகையில், 25 சதவீதத்தை செலுத்தி ஒப்பந்தம் மேற்கொள்ளலாம். மீதமுள்ள 75 சதவீத தொகையை 6 மாத காலத்திற்குள், அதிகபட்சமாக 6 தவணையாக செலுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.