நிலுவை மனுக்களை பதிவேற்ற சிறப்பு மையம்
அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் கடந்த டிச., 2ம் தேதிக்கு முன் விண்ணப்பித்து, நிலுவையில் உள்ள மனுக்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் பழனி செய்திக்குறிப்பு: அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தி, சமூக பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு உடலுழைப்பு தொழிலாளர்கள் சட்டத்தை தமிழக அரசு உருவாக்கியது. இதில் உள்ள 18 நலவாரியங்களில், 18 - 60 வயதுக்குட்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் கல்வி, திருமணம், பிரசவம், கண் கண்ணாடி, வீட்டு வசதி திட்டம், ஓய்வூதியம், இயற்கை மற்றும் விபத்து மரணம் உள்ளிட்டவற்றிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதி வாய்ந்தவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்த 2023ம் ஆண்டு டிச., 2ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கப்பட்ட பலரது மனுக்கள் நிலுவையில் உள்ளது. இம்மனுக்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், தொழிலாளர்களின் நலன் கருதி, கள்ளக்குறிச்சி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.