கூட்டுறவு சங்க கடன்தாரர்களுக்கு "சிறப்பு கடன் தீர்வுத்திட்டம்"
கூட்டுறவு சங்கங்களில் பண்ணை சாரா கடன்களை பெற்று கடன் தொகையை நீண்ட காலமாக திருப்பி செலுத்த இயலாத கடன் தாரர்கள் சிறப்பு கடன் தீர்வுத்திட்டத்தில் கடனை செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்து கிளைகள் மற்றும் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் பண்ணை சாரா கடன்கள் பெற்று கடன் தொகையை நீண்ட காலமாக திருப்பி செலுத்த இயலாத கடன்தாரர்களுக்காக தமிழக அரசால் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை நாள்:13.12.2023 மூலம் "சிறப்பு கடன் தீர்வுத்திட்டம் " அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 31.12.2022 அன்று கடனை திரும்ப செலுத்த வேண்டிய காலக்கெடு முழுமையாக முடிவடைந்து தவணைத் தவறி நிலுவையில் உள்ள விவசாயம் சாராத அனைத்து கடன்களும் இத்திட்டத்தில் தகுதி பெறும். இத்திட்டத்தின் வழி, கடன்தாரர்கள் கணக்கிடப்பட்ட நிலுவைத் தொகையில் 25 சதவீத தொகையை அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 3 மாத காலத்திற்குள் செலுத்தி கூட்டுறவு வங்கி அல்லது சங்கத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் . மீதமுள்ள 75 சதவீத தொகையை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நாளிலிருந்து 6 மாத காலத்திற்குள் அதிகபட்சமாக 6 தவணைக்குள் செலுத்த வேண்டும்.
கடன் வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஒப்பந்தம் மேற்கொள்ளும் நாள் வரை அசலுக்கு 9 சதவீத சாதாரண வட்டி வசூலிக்கப்படும். கூடுதல் வட்டி, அபராத வட்டி மற்றும் இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். இத்திட்டம் செப்டம்பர் 2024 வரை அமலில் இருக்கும். இத்திட்டம் தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் . வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.