நாமக்கல்லில் விரைவில் முட்டை ஏற்றுமதிக்கான சிறப்பு பொருளாதார மண்டலம்!
நாமக்கல் அருகே 850 ஏக்கரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் 100 ஏக்கரில் முட்டை ஏற்றுமதிக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட உள்ளது.
நாமக்கல்லில், முட்டை மற்றும் முட்டை சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் சங்க தொடக்க விழா நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள நளா ஹோட்டலில் நடைபெற்றது. சங்கத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார் ,செயலாளர் ஜெகன் ராஜேந்திரன் வரவேற்றார்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் இராஜேஸ்குமார் எம்பி , நாமக்கல் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் எம்பி ஆகியோர் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றி பேசினார்கள்.
நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ் மாதேஸ்வரன் எம்பி பேசுகையில் கோழிப்பண்ணை மற்றும் அதை சார்ந்த தொழில்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசிடம் இருந்து பெற்று தருவதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இராஜேஸ்குமார் எம்பி சிறப்புரையாற்றி பேசுகையில்.. கோழிகளை கூண்டுகளில் அடைக்கும் முறைக்கு எதிரான நடவடிக்கை வந்த போது அது பற்றி நாடாளுமன்றத்தில் விளக்கமாக பேசி, தடுத்து நிறுத்தினேன்.
அந்த நிலை இன்றும் தொடர்ந்து வருகிறது.நாமக்கல்லில் உற்பத்தியாகும் மொத்த முட்டைகளில் 3 சதவீதம் தான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்த ஏற்றுமதியை அதிகரிக்கவேண்டும். இதற்காக அரசின் சார்பில் செய்யவேண்டிய அனைத்து உதவிகளும் செய்யப்படும்.கோழிப்பண்ணை தொழிலை இன்றைய நவீன காலத்துக்கு ஏற்றார் போல பண்ணையாளர்கள் நடத்திட முன்வரவேண்டும். அதற்கு தேவையான அனுமதிகளை அரசிடம் இருந்து பெறவேண்டும். இதற்கு கோழிப் பண்ணையாளர்கள் தயங்கக் கூடாது. மாசுகட்டுபாட்டு வாரியத்திடம் இருந்து கோழிப்பண்ணைகளுக்கு அனுமதி பெறுவதில் உள்ள பிரச்சனைகள் குறித்து அத்துறையின் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விரைவில் துறையின் அமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். நாமக்கல் அருகே 850 ஏக்கரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் 100 ஏக்கரில் முட்டை ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும். இதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு நாமக்கல்லில் உள்ள கோழிப் பண்ணையாளர்கள் சங்கங்கள், முட்டை ஏற்றுமதியாளார் சங்கங்கள் ஓரணியில் இருக்கவேண்டும்.
அப்போதுதான் இந்த தொழிலின் வளர்ச்சி அடுத்து கட்டத்துக்கு செல்லும்.நாமக்கல்லில் கோழிப்பண்ணை தொழிலை பாதுகாக்கும் வகையில் நவீன ஹை டெக் லேப் அமைக்க அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கோழிப் பண்ணையாளர்கள், முட்டை ஏற்றுமதியாளர்கள், கோழிப்பண்ணை சார்ந்த விற்பனை நிறுவனங்கள் மற்றும் மூலப்பொருட்கள் விற்பனையாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.