பிள்ளையார்பட்டியில் உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை

சிவகங்கை மாவட்டம்,பிள்ளையார்பட்டி கோயிலில் உலகநன்மைக்காக நடைபெற்ற பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-03-04 17:11 GMT

சிறப்பு பூஜை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவிலில் உலக நன்மை வேண்டி கோடி லட்சார்ச்சனை வைபவம் நடைபெற்றது. புராண சிறப்புமிக்க குடைவரைக் கோயில் என்று அழைக்கப்படும் இக்கோவிலில் விநாயகப் பெருமான் ஸ்ரீ கற்பக விநாயகர் சுவாமியாக அருள் பாலித்து வருகிறார்.

இக்கோவிலில் முதல்முறையாக உலக நன்மை வேண்டி ஏராளமான சிவாச்சாரியார்கள் கொண்டு தினமும் காலை ஐம்பதாயிரம் அர்ச்சனைகள் மாலை 50,000 நாமாவளி அர்ச்சனைகள் செய்து தினமும் ஒரு லட்சம் அர்ச்சனைகள் வீதம் 100 நாட்களுக்கு 1 கோடி நாமாவளி அர்ச்சனைகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு நாள் நிகழ்வாக கொடிமரம் முன்பு வெள்ளி கேடயத்தில் உற்சவர் கற்பக விநாயகர் சர்வ அலங்காரத்தில் தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளினர்.

தொடர்ந்து சிவாச்சாரியார்கள் விநாயகர் பெருமானை சுற்றி நின்று அருகம்புல், துளசி, மரிக்கொழுந்து, செவ்வந்தி, சம்பங்கி, மஞ்சள், உள்ளிட்ட பல வகையான உதிரி புஷ்பங்கள் கொண்டு விநாயகப் பெருமானின் திருநாமங்களை கூறி அர்ச்சனைகள் நடத்தினர். நிறைவாக வேத மந்திரங்கள் முழங்க ஏழு முகங்கள் கொண்ட தீபங்களை கொண்டு பத்து தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News