ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை
சிவகங்கையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளனமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கட்டி தழுவி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.;
சிறப்பு தொழுகை
இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் கடைபிடிக்கப்படும் நோன்பு ஆகும். ஆண்டுதோறும் இந்த மாதத்தில் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பை கடைபிடிப்பார்கள். ஒரு மாத காலம் கடைபிடிக்கப்பட்டுவந்த இந்த நோன்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகையை தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மதுரை முக்கு பகுதியில் உள்ள ஈகா மைதானத்தில் சிறப்பு தொழுகையானது நடைபெற்றது. இதில் சிவகங்கையை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஏராளமானோர் புத்தாடை உடுத்தி தொழுகையில் ஈடுபட்டதுடன் ஒருவருக்கு, ஒருவர் புனித ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மேலும் புத்தாடை உடுத்திய சிறுவர்களும் தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டதுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.