ஸ்ரீவில்லிபுத்தூர் : நகை திருட்டில் ஈடுபட்ட தம்பதி உட்பட 6 பேர் கைது

கோயில் திருவிழாக்களில் நெரிசலை பயன்படுத்தி நகை திருட்டில் ஈடுபட்ட தம்பதி உட்பட 6 பேரை ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

Update: 2023-12-03 12:05 GMT
 கைது செய்யப்பட்டவர்கள் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இடையபொட்டல் தெருவை சேர்ந்த சுமதி.இவர் கடந்த ஜூலை 1ம் தேதி சனி பிரதோஷத்தை முன்னிட்டு மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது கூட்டத்தில் சுமதி கழுத்தில் அணிந்திருந்த 3பவுன் தங்க செயின் திருடு போனது. இதுகுறித்து புகாரில் ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த செயின் பறிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீரப்பூர் என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற குற்றப்பிரிவு எஸ் ஐ ரவி தலைமையிலான தனிப்படையினர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியில் சேர்ந்த முருகன்(55), அவரது மனைவி அலமேலு(45) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களுடன் இருந்த கோவில்பட்டியைச் சேர்ந்த பொன்மணி(32), மாரிமுத்து(26), செல்வி(34), நாகம்மாள்(57) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி மடவார் வளாகம் கோயிலுக்குச் சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் நகை பறித்தது, கடந்த ஜூன் மாதம் வ. புதுப்பட்டி ரேணுகா தேவி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் மகாலட்சுமி என்பவரிடம் 6 பவுன் செயின் பறித்தது தெரியவந்தது. 6 பேரையும் கைது செய்த குற்றப்பிரிவு போலீஸார், அவர்களிடமிருந்து 9 பவுன் நகை மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் கோயில் திருவிழாக்கள் நடைபெறும் ஊர்களுக்கு குழுவாக சென்று கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருட்டில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News