டெங்கு தடுப்பு குறித்து தெருக்களில் நின்று நூதன பிரச்சாரம்
திண்டுக்கல் லட்சுமணபுரம் பகுதியில் டெங்கு தடுப்பு பணியாளர்கள் கையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி தெருக்களில் நின்று நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் .
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டு பகுதிகளில் 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளது. இவற்றிலிருந்து நாள்தோறும் 80 டன் குப்பை கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பையில்லா நகரமாக திண்டுக்கல்லை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினந்தோறும் காலை வார்டு வாரியாக வீடு வீடாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பொது மக்களை நேரடியாக சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மாநகராட்சி ஒன்பதாவது வார்டுக்கு உட்பட்ட லட்சுமணபுரம் பகுதியில் டெங்கு தடுப்பு பணியாளர்கள் கையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி தெருக்களில் நின்று நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது என் பெருமை, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம், நீர் மண் பலம் காப்போம் எனது குப்பை எனது பொறுப்பு, தூய்மையே சேவை என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை தெரு ஓரங்களில் நின்று நூதன விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.