மாமல்லபுரத்தில் புதிய புறவழிப்பாதை மேம்பாலங்களுடன் அமைப்பு
மாமல்லபுரத்தில் புதிய புறவழிப்பாதை மேம்பாலங்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரி வரை, தேசிய நெடுஞ்சாலை 332 ஏ, முக்கிய கடலோர வழித்தடமாக அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இத்தடத்தை நான்கு வழிப் பாதையாக மேம்படுத்தி வருகிறது. முதலில், மாமல்லபுரம் - முகையூர் பகுதியில், சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
இதற்கு முன், கிழக்கு கடற்கரை சாலையாக இருந்தது. இவ்வழித்தடத்தில், கல்பாக்கம், புதுப்பட்டினம் முக்கிய இடமாக உள்ளது. அணுசக்தி துறையின் கல்பாக்கம் நகரியத்தை ஒட்டி, புதுப்பட்டினம் வர்த்தக பகுதியில், இச்சாலை கடந்தது. இப்பகுதியில் அதிகரித்த போக்குவரத்து கருதி, கடந்த 2002ல், இச்சாலைக்கு சற்று மேற்கில், புறவழி அமைக்க முயன்றபோது, இப்பகுதி பிரமுகர்கள், வியாபார நோக்கம் கருதி எதிர்த்ததால் கைவிடப்பட்டது. கடந்த 2018ல், இளையனார்குப்பம் கால்வாய் பாலம் கட்டிய போது, அதே திட்டத்தின்கீழ், முன்பு கைவிடப்பட்ட புறவழிப்பாதையும் அமைக்கப்பட்டது. இதில், இளையனார்குப்பம், புதுப்பட்டினம் பகுதிகளில் குறுகிய அபாய வளைவுகள், சந்திப்புகள் உள்ளன. வாயலுார் தடத்திலும், அவ்வாறே உள்ளன. அதனால், விபத்து அதிகரிக்கிறது.
எனவே, இளையனார்குப்பம் கால்வாய் பாலம் பகுதி துவங்கி, வாயலுார் பாலாற்று பாலம் வரை, 4 கி.மீ., தொலைவிற்கு, புதிய புறவழிப்பாதை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்தது. இப்பாதைப் பணிகள், தற்போது நடந்து வருகின்றன. புதிய பாதை, புதுப்பட்டினத்திலிருந்து 1.5 கி.மீ., மேற்கில் அமைக்கப்பட்டுள்ளது. இளையனார்குப்பம் - விட்டிலாபுரம் சாலை சந்திப்பு, வாயலுார் - பழைய கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு ஆகிய இடங்களில், பெரிய பாலங்கள்,
பிற சிறிய பாலங்கள் கட்டுமானம் மற்றும் சாலைப் பணிகள் வேகமெடுத்துள்ளன. புதிய தடத்தில் உள்ள வசுவசமுத்திரம் பகுதியில், பயணவழி ஓய்விடமும் அமைக்கப்பட உள்ளது. அதேபோல், கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம், ஆரம்பாக்கம் துவங்கி பூந்தண்டலம் வரை, 3 கி.மீ., தொலைவிற்கு பழைய கிழக்கு கடற்கரை சாலையை தவிர்த்து, புதிய புறவழிப்பாதை மேம்பாலங்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது.