விடுதிகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் !
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு விடுதிகளில் தங்கிப்படிக்க தகுதியான பள்ளி, கல்லூரி மானவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசால், தஞ்சாவூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் - மிகப் பிற்படுத்தப்பட்டோர் - சீர்மரபினர்-சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான, பள்ளி விடுதிகளில் மாணவர்களுக்கு 26 ம், மாணவிகளுக்கு 11 ம், கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ விடுதிகளில் மாணவர்களுக்கு 7ம், மாணவிகளுக்கு 11 ம் என மொத்தம் 55 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ-மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் , மூன்று வேளை உணவு, தங்கும் வசதியும், 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்-மாணவியருக்கு 4 இணைச்சீருடைகள் வழங்கப்படும். 10, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் -மாணவியருக்கு கல்வித்திறனை மேம்படுத்தும் பொருட்டு சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நூல்கள் வழங்கப்படும். கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப் பயிலும் மாணவ-மாணவியருக்கு ஜமுக்காளமும், பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ-மாணவியருக்கு ஆண்டுதோறும் பாய்களும் வழங்கப்படும். மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும், விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள் பெற்றோர்- பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி,மீ க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விடுதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ-மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்- காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 14.06.2024 க்குள்ளும், கல்லூரி விடுதிகளைப் பொறுத்தவரை 15.07.2024 க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்க தேவையில்லை.
விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே. பள்ளி- கல்லூரி மாணவ - மாணவியர் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.