53 ஆண்டுகளுக்கு பின் பள்ளிக்கு வந்த மாணவர்கள்
நாகை அரசு உதவி பெறும் தேசிய மேல்நிலைப்பள்ளியில் நடந்த முன்னாள் மாணவர் சந்திப்பில் 53 ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் படித்த மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
Update: 2024-02-19 06:21 GMT
நாகையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அரசு உதவி பெறும் தேசிய மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 53 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து பள்ளி கால பசுமை நிறைந்த நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். பள்ளியில் 1971 ஆம் வருடம் 11 ஆம் வகுப்பு (பழைய பியூசி) பயின்ற 30க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பள்ளி படிப்பை முடித்து பல ஊர்களில் வசித்து வரும் முன்னாள் மாணவர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றினாலும் பள்ளி நண்பர்களாக நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் பள்ளியின் மலரும் நினைவுகளை ஞாபகப்படுத்தும் வகையில், தாங்கள் பயின்ற வகுப்பில் அமர்ந்து தமிழ் மற்றும் கணித பாடங்களை தற்போதைய ஆசிரியர்கள் நடத்த மலரும் நினைவுகளை அசைப்போட்டனர். அதை தொடர்ந்து பள்ளிக்கு தேவையான பொருட்களை பரிசளித்தனர். நாகையில் பழமை வாய்ந்த பள்ளியில் 53 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.