கனரக வாகனங்களால் மாணவர்கள் பீதி - பள்ளி நேரத்தில் தடை விதிக்கப்படுமா?
வாலாஜாபாத் சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு சாலையில் வாலாஜாபாத் உள்ளது. இங்கு அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த கல்விக்கூடங்களில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர் பயில்கின்றனர். காஞ்சிபுரத்தில் இருந்து, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வாலாஜாபாத் வழியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், சென்னை புறநகர் பகுதிகளில் இயங்கும் ஏராளமான தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை ஏற்றி செல்லும் தனியார் பேருந்துகள், வாலாஜாபாத் வழியாக செல்கின்றன. இங்குள்ள பஜார் வீதியில், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் பல ஆண்டுகளாக தொடர்கிறது. குறுகிய பஜார் வீதியில் கனரக வாகனங்கள் இயக்கும்போது, எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட இயலாத நிலை உள்ளதால், நாள் முழுதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் தினமும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கோடை விடுமுறையை தொடர்ந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. எனவே, மாணவர்கள், பள்ளிக்கு வந்து வீட்டுக்கு திரும்பும் வரை காலை மற்றும் மாலை நேரங்களில், வாலாஜாபாத் சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.