அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகள் புதுமை பெண் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

புதுமை பெண் திட்டத்தின் கீழ், வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவிகள் புதுைம பெண் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

Update: 2024-07-12 07:38 GMT

Chennai Collector Rashmi Siddharth Zagade

புதுமை பெண் திட்டத்தின் கீழ், வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவிகள் புதுைம பெண் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், பெண் கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து பெண் சமூகம் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், படைப்பாளராகவும், கல்வி அறிவு தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாக அடித்தளமாக ‘புதுமை பெண்’ என்னும் உன்னதமான திட்டம் தமிழ்நாடு முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலமாக புதுமை பெண்’ திட்டத்தில், அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சென்னை மாவட்டத்தில் 11,015 மாணவிகள் மாதம் ரூ.1000 பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்தால் பயன் பெற்றனர். இதைத் தொடர்ந்து, வரும் 2024-25ம் கல்வியாண்டு முதல் ‘புதுமை பெண்’ திட்டத்தின் வாயிலாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்த மாணவிகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, மாதம் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. எனவே, சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலும் மாணவியர் ‘புதுமை பெண்’ திட்டத்தில் பயன்பெற அந்தந்த கல்லூரியின் சிறப்பு அலுவலர் (நோடல் அலுவலர்) வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News