குமரியில் திடீர் சூறைக்காற்று - 3 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்
Update: 2023-12-21 02:46 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. தற்போது சற்று மழை தணிந்து உள்ளது. இந்த நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்ட மலையோர பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சூறைக்காற்று வீசுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் குலசேகரம் அருகே சுருளக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று வீசியதில் பல இடங்களில் வாழை மரங்கள் மற்றும் மர கிளைகள் முறிந்து விழுந்தன. மலையோர பகுதிகளான சுருளக்கோடு, பன்னியோடு மற்றும் ஆலம்பிலாவடி பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. வீரபுலியை சேர்ந்த லாரன்ஸ் (60)என்பவர் எட்டு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்ட 2 ஆயிரத்து 500 வாழைகள் காற்றில் முறிந்து சேதமடைந்தது. மேலும் பல இடங்களில் இது போன்று வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. சம்பந்தப்பட்ட இடங்களில் புகாரின் பேரில் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், வருவாய் துறையினர் பார்வையிட்டனர்.