பூச்சிகளின் தாக்குதலை குறைக்க கோடை உழவு அவசியம்

பூச்சிகளின் தாக்குதலை குறைக்க கோடை உழவு அவசியம் என சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2024-03-14 06:08 GMT

பூச்சிகளின் தாக்குதலை குறைக்க கோடை உழவு அவசியம் என சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். 

சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் பூச்சிகளின் தாக்குதலை குறைக்க கோடை உழவு அவசியம் என வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து, சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடைப் பகுதியில் கோடை உழவிற்கு இதுவே ஏற்ற தருணம். அறு வடை செய்து தரிசாக கிடக் கும் நிலங்களை விவசாயிகள் கோடை உழவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. முதலில் வயலை  இரும்புக் கலப்பை கொண்டோ அல்லது டிராக்டர் கொண்டோ குறுக்கும், நெடுக்குமாக ஆழமாக புழுதி உழவு செய்ய வேண்டும். இவ்வாறு கோடை உழவு மேற் கொள்வதால் புல், பூண்டுகள் வேர் அறுந்து கருகிவிடுகிறது. மண் பொளபொளப்பு தன்மை அடைகிறது.  பயிர் பருவகாலங்களில் சிலவகை பூச்சிகளின் புழுக்கள் மண்ணுக்குள் சென்று கூண்டுப் புழுக்களாக மாறி பேரிச்சங்கொண்ட போன்ற உருவத்தில் மண்ணுக்கடியில் வளர்ந்து கொண்டிருக்கும்.

உழவு செய்வதன் மூலம் புழுக்கள் மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு அவை பறவைகளால் பிடித்து தின்று அழிக்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த பயிர் சாகுபடியின்போது பூச்சிகளின் தாக்குதல் வெகுவாக குறைகிறது. களைச்செடிகள் முற்றிலும் அழிக்கப்படுகிறது.  மண்ணில் நீர்பிடிப்பு தன்மை பெறுகிறது. மண்ணின் பவுதீக தன்மை மேம்படுகிறது. நாற்றங்கால் மற்றும் நடவு வயல் தயாரிப்பு மிகவும் எளிதாகிறது. உரம் சமச்சீராக கிடைத்து வேர் வளர்ச்சி தூண்டப்படுவதுடன் பயிர் செழித்து வளர்கிறது. இதனால் மகசூல் கூடுதலாக கிடைக்கிறது.  அதே சமயம் மணல்சாரி, களர் மற்றும் உவர் நிலங்களில்  கோடை உழவை தவிர்க்க வேண்டும். காரணம் கோடை உழவினால் மணல் சாரி நிலங்களில் ஈரத்தன்மை குறைகிறது. களர் மற்றும் உவர் நிலங்களில் நீர் ஆவியாகிவிடுவதால் உப்புத் தன்மை ஏற்படும் அபாயம் வரும். எதிர்வரும் கோடை காலத்தில் பெய்யக்கூடிய மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்வது நல்ல மகசூலை கொடுக்கும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. .

Tags:    

Similar News