மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு : தேமீக அறிவிப்பு !
தூத்துக்குடியில் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தேசிய மீனவர் கட்சியின் பொதுச்செயலாளர் சேனாதிபதி சின்னதம்பி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதனை தேசிய மீனவர் கட்சியின் பொதுச் செயலாளர் சேனாதிபதி சின்னதம்பி நேற்று தூத்துக்குடி தேவர்புரம் சாலையில் உள்ள மாவட்ட தலைமை தேர்தல் காரியாலயத்தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களுக்கு அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளதாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் "அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீனவர்களுக்கு இந்த நாடாளுமன்ற தேர்தலில் மூன்று இடங்களில் போட்டியிட வாய்ப்பு அளித்திருக்கிறார். அதற்கு அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்து வருகிறோம்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடன் கள்ள உறவு வைத்துள்ள விடியா திமுக அரசு தமிழகத்தின் கனிம வளங்களை சுரண்டி மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகிறது. இதனை தேசிய மீனவர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் திமுக அரசு தொடர்ந்து தவறான கருத்துக்களை பரப்பி வருகிறது. கருணாநிதி அவரது மகன் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி மற்றும் அவரது மகன் இன்பநிதி என மூன்று தலைமுறைகளாக கட்சத் தீவு மீட்பு விவகாரத்தில் மீனவர்களை இந்த விடியா திமுக அரசு தொடர்ந்து ஏமாற்றி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.