வத்திராயிருப்பில் அகற்றப்படாத அரசியல் கட்சிகளின் அடையாளங்கள்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த நிலையில் தென்காசி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள்,சுவர் விளம்பரங்கள்,கொடி கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நேற்று முதல் தமிழக முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து உள்ளது, இந்த நிலையில் வாக்காளர்களுக்கு தேர்தலுக்கு பண பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் அரசியல் கட்சியினரால் கொடுக்கப்படுகிறதா எனவும் அனுமதி இன்றி கொண்டு செல்லப்படும் பரிசுப் பொருட்கள் மற்றும் உரிய விவரங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணங்கள் ஆகியவற்றை தேர்தல் பறக்கும்படையினர் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் வைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு பறிமுதல் செய்து வருகின்றனர்.
மேலும் அரசியல் கட்சியினர் வைத்துள்ள பிளக்ஸ் பேனர்கள் சுவரொட்டிகள் சுவர் விளம்பரங்களையும் அதிகாரிகள் அகற்றி வரும் சூழ்நிலையில் தென்காசி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிகாரிகள் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகியும் தற்போது வரை விளம்பர பேனர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் சுவர் விளம்பரங்கள் கொடி கம்பங்கள் அகற்றப்படாமல் இருப்பதால் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அகற்றப்படாமல் இருக்கும் சுவரொட்டிகள் மற்றும் கொடிக்கம்பங்கள் சுவர் விளம்பரங்களை உடனடியாக அதிகாரிகள் அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்