தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சின்ன வெங்காயத்திற்கு மத்திய அரசு கிலோ ஒன்றிற்கு ரூ.40 விலை நிர்ணயம் செய்து நுகர்வோர் நலத்துறையின் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பெரம்பலூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-08 02:25 GMT

ஆர்ப்பாட்டம் 

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமையில் விவசாயிகள் திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கரும்புக்கு டன் ஒன்றிற்கு 4000 ரூபாய் விலையை, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு அறிவிக்க வேண்டும், திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி மின் நுகர்வோர்களிடம் மின் கட்டணம் வசூலிக்கும் முறையை மாதம் ஒரு முறை கணக்கீடு செய்து அதற்கான மின் கட்டண தொகையை வசூல் செய்ய வேண்டும்,

மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையால் தமிழகத்திலேயே அதிகப்படியாக சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படும் பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளதை கருத்தில் கொண்டு மத்திய அரசு சின்ன வெங்காயத்திற்கு கிலோ ஒன்றிர்க்கு 40 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து மத்திய அரசின் நுகர்வோர் நலத்துறையின் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதோடு மத்திய அரசு சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்கி அதனை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்க வேண்டும்,

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் வரட்சியாலும் படைப்புழு தாக்குதலாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மக்காச்சோளப் பயிர்கள் குறித்து அரசு கணக்கெடுப்பு நடத்தியும் இதுவரை நிவாரணத் தொகையை தமிழக அரசு அறிவிக்கவில்லை. மக்காசோளம் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனே நிவாரணத் தொகையை வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் வெங்காயம் மற்றும் மக்கா சோளத்தை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டும் தலையில் கிரிடம் போன்று அணிந்து கொண்டும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News