தஞ்சை மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர்
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் பாஜகவில் இணைந்துள்ளனர்.
Update: 2024-03-25 16:15 GMT
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னணி தேமுதிக நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, தஞ்சை தேமுதிகவின் அடையாளமாக விளங்கிய மாநகர மாவட்டச் செயலாளர் டாக்டர் ராமநாதன் தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளனர். தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. இந்நிலையில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக மாநகர மாவட்ட செயலாளர் டாக்டர் ராமநாதன் அறிவிக்கப்படுவார் என கட்சியினரிடையே எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் அவருக்கு பதிலாக வேட்பாளராக சிவனேசன் அறிவிக்கப்பட்டார். இதில் டாக்டர் ராமநாதன் தரப்பினர் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் ராமநாதன், பொருளாளர் கரம்பை சிவா, துணைச் செயலாளர் நாகநாதன், வசந்த் பெரியசாமி, வள்ளி, செயற்குழு உறுப்பினர் நடராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் கலைவாணன், மணிவண்ணன், தஞ்சை மேற்கு பகுதி செயலாளர் செந்தில், வடக்கு பகுதி செயலாளர் சூரிய பிரகாஷ், தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், வல்லம் பேரூர் செயலாளர் மதியழகன், ஒரத்தநாடு பேரூர் செயலாளர் சரவணன், தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் சச்சின், தொண்டரணி செயலாளர் விக்கி, மாணவரணி செயலாளர் கார்த்திக், துணை செயலாளர்கள் இளையராஜா, அண்ணாதுரை உள்ளிட்டோர் நேற்று கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஜெய்சதீஷ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இது தஞ்சை மாவட்ட திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டாக்டர் ராமநாதனை கட்சியிலிருந்து நீக்குவதாக தேமுதிக தலைவர் பிரேமலதா அறிவித்துள்ளார்.