வெப்பநிலை தாக்கத்தினை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

கோடை காலப் பயிர்களில் வெப்பநிலை தாக்கத்தினை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் துறை விளக்கம் அளித்துள்ளது.

Update: 2024-05-09 01:44 GMT

கோடை காலப் பயிர்களில் வெப்பநிலை தாக்கத்தினை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் துறை விளக்கம் அளித்துள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டாரப் பகுதிகளில் கோடை காலப் பயிர்களில், அதிக வெப்பநிலை தாக்கத்தினை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்து,  சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ஜி.சாந்தி விளக்கம் அளித்துள்ளார்.  இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,  நெல் :- நெற்பயிரில் இலைவழி தெளிப்பாக 3 சதவிகிதம் கயோலின் (Kaolin) அல்லது 1 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை குறிப்பிட்ட வளா்ச்சி பருவத்தில், முறையே தூா் கட்டும், கதிர் உருவாகும் மற்றும் பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும். பி.பி.எப்.எம் (மெத்தைலோ பாக்டீரியம்) நுண்ணுயிர் உரம் (PPFM) பயன்படுத்தலாம். (விதை நோ்த்தி செய்ய 5 கிலோ விதைக்கு 200 கிராம், அடியுரமாக மண்ணில் இட எக்டருக்கு 2 கிலோ, இலை வழி தெளிப்பாக எக்டருக்கு 500 மில்லி லிட்டர் வீதம், கதிர் உருவாகும் மற்றும் பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும்) இலை வழி தெளிப்பாக 2 சதவிகிதம் மோனோ அமோனியம் பாஸ்பேட் மற்றும் 1 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை பூப்பதற்கு 15 நாட்கள் முன்பாக மற்றும் பூக்கும் பருவத்தில் தெளிப்பதன் மூலம் தானிய எடை மற்றும் உற்பத்தியை அதிகரிக்கலாம்.

குறுவை பட்டத்தில் இலை வழி தெளிப்பாக 1 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடு + 500 பிபிஎம் சைக்கோசெல் (CCC) பயிர் வளா்ச்சி பருவத்தில் (தூா் கட்டும் மற்றும் கதிர் உருவாகும்) தெளிக்க வேண்டும். மக்காச்சோளம் :- TNAU மக்காச்சோள மேக்சிம் (TNAU Maize Maxim) 3 கிலோ என்ற அளவில் 200 லிட்டா் தண்ணீரில் கலந்து, இலை வழித் தெளிப்பாக கதிர் அரும்பும் தருணத்தில் தெளிப்பதன் மூலம் கதிர் அதிகம் பிடித்து, மகசூல் அதிகரித்து மற்றும் வறட்சியை தாங்கும் தன்மை அளிக்கிறது. பயறுவகை :- இடைப்பருவ வறட்சி மேலாண்மையாக ரபி பருவத்தில் 2 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடு மற்றும் 100 பி.பி.எம் போரான் தெளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும். இலை வழி தெளிப்பாக பயறு நுண்ணூட்டம் ஏக்கருக்கு 2 கிலோ வீதம் பூக்கத் தொடங்கும் பருவத்தில் அளிப்பதன் மூலம் பூ உதிர்தல் குறைந்து, அதிக மகசூல் மற்றும் வறட்சியை தாங்கி வளருகிறது. இலை வழி தெளிப்பாக ஒரு லிட்டா் தண்ணீரில் என்.ஏ.ஏ (NAA) 40 பி.பி.எம் (40 மில்லி கிராம்) அல்லது சாலிசிலிக் அமிலம் (Salicylic Acid) 100 மில்லி கிராம் கலந்து பூக்கும் பருவத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும். நிலக்கடலை :- நிலக்கடலையில் பூவை தக்க வைத்தல், நெற்று நிரப்புதல் மற்றும் வறட்சியைத் தாங்கும் தன்மையை அதிகரிக்க, நிலக்கடலை நுண்ணூட்டம் எக்டருக்கு 5 கிலோ (ஒவ்வொரு தெளிப்பிற்கும்) என்ற அளவில் 500 லிட்டா் தண்ணீரில் கலந்து இரண்டு தெளிப்பாக விதைத்த 35-ஆம் நாள் (50 சதவிகிதம் பூக்கும் சமயத்தில்) மற்றும் விதைத்த 45-ஆம் நாள் (காய் முற்றும் பருவம்) தெளிக்க வேண்டும். மேலும், சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் நுண்ணூட்டம், பயறு நுண்ணூட்டம் மற்றும்                நிலக்கடலை நுண்ணூட்டம் 50 சத மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் அதனைப் பெற்று பயனடையலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News