தெருவை ஆக்கிரமித்து கட்டப்படும் கோவில்: தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே தனி நபர்கள் தெருவை ஆக்கிரமித்து கட்டப்படும் கோவிலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2024-01-13 14:23 GMT

கோவில் 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே சிந்தாமணி பஜார், வென்னிஸ் தெரு பகுதியில் உள்ளது அந்தோணியார் கோவில் தெரு. இந்த தெருவில் அனைத்து மதத்தினரும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தோடு வசித்து வருகின்றனர்.

இது திருச்சி மாநகராட்சி 13வது வார்டுக்கு உட்பட்ட பகுதியாகும். இந்த அந்தோணியார் கோவில் தெரு பிரியும் இடத்தில் சிறிய அளவிலான சித்து மாரியம்மன் கோவிலை ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினர் கட்டி பராமரித்து வந்தனர். மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டிருந்தது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அந்த குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவும், மாநகராட்சி தலையீடு காரணமாகவும் கோவில் இடிக்கப்பட்டது. பின்னர் அந்த குடும்பத்தினரில் ஒரு பிரிவினர் தனியாக அம்மன் சிலையை அந்தோணியார் கோவில் தெருவில் வைத்து நிறுவி சிறிய அளவிலான கீற்று கொட்டகை அமைத்து வழிபாடு நடத்தி வந்தனர். இதற்கு அப்போதே பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

தெருவை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இந்த கோவிலை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அந்தோணியார் கோவில் சாலை சிமெண்ட் சாலையாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து அந்தோணியார் கோவில் தெருவில் இருந்த ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டது

அந்த வகையில் இந்த கீற்றுக் கொட்டகையினாலான அம்மன் கோவில் அகற்றப்பட்டது. அம்மன் சிலையை அந்த குடும்பத்தினர் தங்களது வீட்டு வாசலுக்கு இடமாற்றம் செய்து வழிபாடு நடத்தினர். இதைத் தொடர்ந்து பல லட்சம் ரூபாய் செலவில் கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு தற்போது போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக லாரிகள் வரை இந்த தெருவில் சென்று வரக்கூடிய வகையில் அகலமாக அமைக்கப்பட்டுள்ளது.

அவசர காலத்திற்கு தீயணைப்பு துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்றவை அந்தோணியார் கோவில் தெருவிற்குள் வந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அந்தோணியார் கோவில் தெரு திருப்பத்தில் அமைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் அம்மன் சிலையை நிறுவ அந்த குடும்பத்தினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதற்காக அந்த பகுதியில் தகரக் கொட்டகை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநகராட்சிக்கு சொந்தமான தெருவை ஆக்கிரமித்து கொட்டகை அமைத்தால் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும். அவசர காலத்திற்கு தீயணைப்பு துறை வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளே வர முடியாத நிலை உருவாகும். ஆகையால் தற்போது உள்ளபடியே அம்மன் சிலை அந்த குடும்பத்தினரின் வீட்டு வாசலிலேயே வைத்து வழிபாடு நடத்த வேண்டும்.

சாலையை ஆக்கிரமித்து கொட்டகை அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்தப் பகுதி மாமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி இளநிலை பொறியாளர் ஆகியோர் கொட்டகை அமைக்க தடை விதித்தனர். ஆனால் இதையும் மீறி கொட்டகை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனினும் அந்த குடும்பத்தினர் தொடர்ந்து மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோரை அணுகி கொட்டகை அமைக்க அனுமதி கோரினர்.

இவர்களும் சாலையை ஆக்கிரமித்து கோவில் அமைக்க அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். ஆகையால் அந்த பகுதியில் கொட்டகை அமைத்தால் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும். அதே போல் இதர மதங்களைச் சேர்ந்தவர்களும் இதே போல் ஆக்கிரமித்து வழிபாட்டுத் தலங்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்வார்கள். ஆகையால் இந்த நிலையை ஆரம்பத்திலேயே மாநகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News