தலைவாசல் ஒன்றியகுழு கூட்டம்
சேலம் மாவட்டம்,தலைவாசலில் நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டத்தில் பில் வழங்குவதில் காலதாமதம் செய்யகூடாது என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், தலைவாசல் ஒன்றிய குழு கூட்டம் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் அஞ்சலை, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) செந்தில், ஒன்றிய ஆணையாளர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார்.
தலைவாசல் ஒன்றியத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை முடித்துக் கொடுக்கின்ற ஒப்பந்ததாரர்களுக்கு பில் வழங்குவதில் காலதாமதம் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பில் வழங்குவதில் காலதாமதம் செய்யக்கூடாது எனவும் தி.மு.க. மற்றும் அ.தி. மு. க. ஒன்றிய குழு உறுப்பினர்கள் புகார் தெரிவித்து பேசினர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் கூறும்போது பில் வழங்குவதில் காலதாமதம் இல்லாமல் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.