தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ. 20 கோடிக்கு உபரி நிதி நிலை அறிக்கை

தஞ்சாவூர் மாநகராட்சியில் நிதிநிலை அறிக்கை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-29 14:15 GMT
தஞ்சாவூர் மாநகராட்சி நிதிநிலை அறிக்கை

தஞ்சாவூர் மாநகராட்சியில் 2024 - 25 ஆம் ஆண்டில் ரூ. 20 கோடிக்கு உபரி நிதிநிலை அறிக்கை வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர்  சண்.ராமநாதன் தலைமையில், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் இரா.மகேஸ்வரி முன்னிலையில் மாமன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், 2024 - 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் சண்.ராமநாதன் தாக்கல் செய்து பேசியதாவது: தஞ்சாவூர் மாநகராட்சியில் 2024 - 25 ஆம் நிதியாண்டில் வருவாய் மற்றும் மூலதன நிதிப் பிரிவில் ரூ. 313.12 கோடிக்கும், குடிநீர் மற்றும் வடிகால் பிரிவில் ரூ. 27.16 கோடிக்கும், கல்வி நிதிப் பிரிவில் ரூ. 4.17 கோடிக்கும் என மொத்தம் ரூ. 344.46 கோடிக்கு வரவினம் கணக்கிடப்பட்டுள்ளது.

  இதேபோல, வருவாய் மற்றும் மூலதன நிதிப் பிரிவில் ரூ. 296.85 கோடிக்கும், குடிநீர் மற்றும் வடிகால் பிரிவில் ரூ. 23.31 கோடிக்கும், கல்வி நிதிப் பிரிவில் ரூ. 4.04 கோடிக்கும் செலவினம் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த வரவினங்கள் ரூ. 344.46 கோடியும், செலவினங்கள் ரூ. 324.22 கோடியும் எதிர்பார்க்கப்படுவதால்,

இந்த முறை ரூ. 20.24 கோடிக்கு உபரி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.  கூட்டத்தில் சலசலப்பு: இதைத்தொடர்ந்து, கூட்டத்தில் நிகழ்ந்த விவாதங்கள்: கே. மணிகண்டன் (அதிமுக): உபரி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதாகக் கூறப்படும் நிலையில், மாநகரில் 3 மாதங்களாக சாலை உள்பட எந்தப் பணியும் நடைபெறவில்லை. மேயர்: தவறான தகவல் கூற வேண்டாம். இந்த ஆட்சியில் தஞ்சாவூர் மாநகரில் 80 விழுக்காடு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, மணிகண்டனுக்கும், திமுக உறுப்பினர்களுக்கும் இடையே சில நிமிடங்கள் சலசலப்பு நிலவியது. கே. மணிகண்டன்: திருவள்ளுவர் வணிக வளாகம், காந்திஜி வணிக வளாகத்தில் கடைகள் தொடர்பான ஏலம் கடந்த கூட்டத்தில் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் நடத்தப்படும் ஏலத்தில் முந்தைய ஏலதாரர்கள் கலந்து கொள்ளக்கூடாது என நீதிமன்றத்தை அணுகியுள்ளேன்.

ஆணையர்: ஏலதாரர்கள் விதிமீறல் செய்யவில்லை. நிர்வாகத் தரப்பில்தான் விதிகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை. இது தொடர்பாக நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்துக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் நடவடிக்கை எடுப்பர். வெளிநடப்பு: வெ.கண்ணுக்கினியாள் (அமமுக): பூக்காரத் தெருவில் சாலை சரியாக அமைக்கப்படவில்லை. இரு நூறு மீட்டர்களில் 100 மீட்டர் அமைக்கப்படாமல் விடுபட்டுள்ளது. மாதா கோயில் அருகே புதை சாக்கடையிலிருந்து கழிவு நீர் வழிந்து செல்வதைத் தடுக்க வேண்டும். கழிவு நீர் வழிவதைத் தடுக்க உடனடியாக அலுவலர்களை அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக மேயர் கூறினார்.

  இதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், அதிருப்தியடைந்த கண்ணுக்கினியாள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

Tags:    

Similar News