மத்திய அரசு மின்துறையில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த கூடாது : ஜி.ராமகிருஷ்ணன்
மத்திய அரசு மின் துறையில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். இது குறித்து தருமபுரி மாவட்டம், அரூரில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: மின்சார துறையில் மின் உற்பத்தி, மின்சார விநியோகம், மின்சார பயன்பாடுகளின் கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளுக்கு தனியார் நிறுவனங்களை பயன்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
முதல்கட்டமாக அனைத்து மாநிலங்களிலும் ஸ்மார்ட் மீட்டர்களை பொறுத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டர் மூலம் கணக்கெடுப்பு மற்றும் கட்டண நிர்ணயம் செய்யும் பணிகளை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும். இதனால் ஏழை, எளிய மக்கள், சிறு, குறு தொழில் செய்பவர்கள், கைத்தறி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கேரளா மாநிலத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த அந்த மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதேபோல், தமிழக அரசும் மின்சார துறையில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்துவதை தடுக்க வேண்டும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இம் மாதம் 15}ம் தேதி முதல் பிரசார இயக்கம் நடத்தப்படவுள்ளது. சென்னிமலையில் இம் மாதம் 9}ம் தேதி, மத நல்லிணக்கம் மற்றும் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி சார்பில் 11 கட்சிகள் இணைந்து பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இஸ்ரேல் காஸா மீதான போரை நிறுத்த வேண்டும். தருமபுரி மாவட்டம், வாச்சாத்தியில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு தேவையான வேலைவாய்ப்பு, வீடுகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு மேம்படுத்த வேண்டும் என்றார். பேட்டியின்போது கட்சியின் நிர்வாகிகள் இளம்பரிதி சிசுபாலன் அர்ஜுனன் குமார் மாதுகோவிந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்