உங்களைத் தேடி உங்கள் ஊரில்: இரவிலும் சர்ப்ரைஸ் விசிட் அடித்த கலெக்டர்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இரவு நேரத்திலும் ஆங்காங்கே நாகை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் மாதத்தின் கடைசி புதன்கிழமை மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுக்காவை தேர்வு செய்து ஒரு நாள் முழுவதும் அங்கேயே தங்கி அங்கு நடைபெறும்" வளர்ச்சிப் பணிகளை முழுமையாக ஆய்வு செய்வார். அதன்படி நேற்று புதன்கிழமை திருக்குவளை தாலுக்காவை தேர்வு செய்து நேற்று முழுமையாக திருக்குவளை தாலுகாவிற்கு உட்பட்ட நீர்முளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டார்.
நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய மாவட்ட ஆட்சியரின் ஆய்வு இரவு வரை நீண்டதோடு திருக்குவளை வட்டாட்சியர் அறையிலேயே எளிமையான முறையில் தங்கி உள்ளார். இரவிலும் திருக்குவளை அரசு மருத்துவமனை மற்றும் போலீசாரின் ரோந்து பணிகளை இருசக்கர வாகனத்தில் சென்று சர்ப்ரைஸ் விசிட் செய்திருக்கிறார். இன்று காலை 6:00 மணிக்கு மீண்டும் தனது ஆய்வு பணியை துவங்கி திருக்குவளை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் நீரேற்றும் நிலையத்தை பார்வையிட்ட அவர் பொது மக்களுக்கு குடிநீர் முறையாக வழங்கப்படுகிறதா? எனவும் குடிநீரில் குளோரினேஷன் அளவு குறித்தும் பரிசோதனை செய்து ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அங்குள்ள அரசு மாணவர் விடுதிக்குள் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மாணவர்களிடம் இயல்பாக பேசி கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
வீட்டிலுள்ள பெற்றோர்கள் போல மாணவர்கள் காலை எழுந்திருக்கும் நேரம் மட்டுமின்றி அவர்கள் பயன்படுத்தும் அறைகள், கழிவறைகள் சுத்தமாக உள்ளதா எனவும் பார்வையிட்டார். தொடர்ந்து மாணவர்களுக்கு அட்டவணைப்படி உணவு சரியாக வழங்கப்படுகிறதா மற்றும் அதன் தரம் குறித்தும் மாணவர்களிடம் நேரடியாக கேட்டு அறிந்தார். ஆட்சியர் இயல்பாக தங்களிடம் பேசியதோடு பெற்றோர்களைப் போல அன்பாக நலம் விசாரித்ததாகவும் மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.