தேவர் சமூகத்திற்கு தொடர்ந்து நல்லது செய்வது திமுக ஆட்சி

தேவர் சமூக மக்களுக்கு தொடர்ந்து நன்மை செய்யக்கூடியதாக திமுக ஆட்சி உள்ளது. மதுரையில் தேவர் சிலை, 3 தேவர் கல்லூரிகள் அமைக்க உதவியவர் கருணாநிதி என சிவகாசியில் நடந்த பிரசாரத்தில் ஶ்ரீதர் வாண்டையார் பேசினார்.

Update: 2024-04-12 08:29 GMT

ஶ்ரீதர் வாண்டையார் பிரசாரம் 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் 5 வது வார்டு பகுதியில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூரை ஆதரித்து மூவேந்தர் முன்னணி கழக தலைவர் ஶ்ரீதர் வாண்டையார் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடியால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மை உடன் செயல்படுகிறது.மத்தியில் யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யக்கூடிய முக்கியமான தேர்தல் இது.ஜிஎஸ்டி வரி விதிப்பால் பட்டாசு தொழில் உட்பட அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு உள்ளது. இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பட்டாசு தொழிலுக்கு எதிரான தடை அகற்றப்படும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதெல்லாம் தமிழகத்திற்கு அதிக நிதிகளை ஒதுக்கினார்கள்.

திமுக ஆட்சியில் பெண்களுக்கான பல்வேறு சிறப்பு திட்டங்களை வாக்குறுதிகளாக முதல்வர் அளித்தார். கச்சா எண்ணெய் விலை உயரும் போது பெட்ரோல், டீசல் விலையை ஏற்றுபவர்கள், கச்சா எண்ணெய் விலை குறையும் போது, பெட்ரோல் விலையை குறைக்க மறுக்கின்றனர்.பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் தருவோம் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என முதல்வர் உறுதி அளித்துள்ளார். தேவர் சமூக மக்களுக்கு தொடர்ந்து நன்மை செய்யக்கூடியதாக திமுக ஆட்சி உள்ளது. மதுரையில் தேவர் சிலை, 3 தேவர் கல்லூரிகள் அமைக்க உதவியவர் கருணாநிதி, இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சாரத்தில் சட்ட உறுப்பினர் அசோகன், மாநகராட்சி மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ் பிரியா, மாமன்ற உறுப்பினர்கள் இந்திராதேவி மாரீஸ்வரன், செல்வம்,மற்றும் நகர்மன்ற தலைவர் பொன் சக்திவேல் ஆகியோர் உள்பட கட்சி தொண்டர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News