காயமடைந்த மயிலை காப்பாற்றிய வனத்துறையினர்
அறந்தாங்கி அருகே ரத்த காயத்துடன் கிடந்த மயிலுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.
அறந்தாங்கி அருகே இரத்த காயத்துடன் கிடந்த மயிலுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.
இது குறித்து தகவல் தெரிவித்த பெண்ணுக்கு அமைச்சர்கள் ரகுபதி, மெய்நாதன் ஆகியோர் மயில் உருவ சிலை வழங்கி பாராட்டினர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவிற்கு உட்பட்ட சிலட்டூர் சரகம் பூங்குடி கிராமத்தில் உடையார்பட்டி ஊரணி கரையில் ஆண் மயில் ஒன்று காலில் அடிபட்ட நிலையில் கிடந்துள்ளது. இதை அடுத்து அப்பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி என்ற பெண் அறந்தாங்கி வட்டாட்சியர் ஜபருல்லாவிற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார் இதையடுத்து வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
வனத்துறையினர் மயிலை வனப்பகுதியில் விட்டனர். இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அறந்தாங்கி வருவாய் கோட்டம் சார்பில் தனியார் திருமணம் மண்டபத்தில் சிறப்பு பட்டா முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்நாதன், மாவட்ட கலெக்டர் மெர்சிரம்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் கடந்த 15ஆம் தேதி மயில் அடிபட்டு கிடக்கும் தகவலை வருவாய்த்துறையினருக்கு கூறிய சுப்புலட்சுமிக்கு பாராட்டி சால்வை அணிவித்து நினைவு பரிசாக மயில் உருவச்சிலையை அமைச்சர்கள் வழங்கினர்.