செல்போனில் ஆபாச படம்... சிக்கன் ரைஸில் விஷம்
சிக்கன் ரைசில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்தது உறுதி செய்யப்பட்டதால் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கிச் சென்ற பகவதியிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.
By : King 24X7 News (B)
Update: 2024-05-03 08:54 GMT
நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ் சாப்பிட்டு ஒருவர் இறந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தன்னை கண்டித்த தாத்தா மற்றும் அம்மாவை கொலை செய்ய, சிக்கன் ரைசில், விஷம் கலந்து கொடுத்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் அருகே உள்ள கொசவம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ், லாரி டிரைவர். இவரது மகன் பகவதி (20), புதுச்சத்திரத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு பி.இ. படித்து வருகிறார். மேலும் இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் இண்டர்நெட் மையத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பளத்தை பெற்ற பகவதி, கடந்த ஏப்ரல் 30ம் தேதி நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள அசைவ ஓட்டலில், 7 சிக்கன் ரைஸ் பொட்டலம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்த அவரது தாயார் நதியாவிற்கு (40) ஒரு பொட்டலம் சிக்கன் ரைஸ் கொடுத்துள்ளார். பின்னர் தேவராயபுரத்தில் வசித்து வரும் தாத்தா சண்முகநாதன் (67) வீட்டிற்கு சென்று சண்முகநாதன் மற்றும் குடும்பத்தினருக்கு முதல் மாத சம்பளத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி வந்துள்ளேன் சாப்பிடுங்கள் என கொடுத்துள்ளார். இதற்கிடையே மகன் ஆசையாக வாங்கி வந்த சிக்கன் ரைசை சாப்பிட்ட நதியா, சண்முகநாதன் ஆகியோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மீதமுள்ளவர்கள் சிக்கன் ரைஸ் சாப்பிடவில்லை. இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நதியா, சண்முகநாதன் ஆகிய இருவரையும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர். முன்னதாக சிகிச்சைக்கு வந்த 2 பேரும் வாயில் நுரை தள்ளியபடி வந்துள்ளனர். எனவே அவர்களுக்கு உணவு ஒவ்வாமையால் பிரச்சினை ஏற்பட்டு இருக்க வாய்ப்பு குறைவு எனவும், சாப்பாட்டில் விஷம் கலந்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் எனவும் ஆஸ்பத்தரியில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர். இதேபோல் சம்மந்தப்பட்ட ஓட்டலில் கடந்த 30-ந் தேதி சுமார் 100 பேர் சாப்பிட்டுள்ளனர். ஆனால் அவர்களில் 2 பேருக்கு மட்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், உணவு பாதுகாப்புத்துறையினருக்கும் சந்தேகம் எழுந்தது. பின்னர் உணவில் எவ்வித குறைபாடும் இருக்க வாய்ப்பு இல்லை என தெரியவந்தது. இதற்கிடையே கடந்த மே 1ம் தேதி அந்த ஓட்டலில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் உமா, சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார், இதையடுத்து ஓட்டலைப் பூட்டி உணவு பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர். மேலும், சிக்கன் ரைஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உமா, நாமக்கல் போலீசாருக்கு உத்தரவிட்டார். அவர்களும் சிக்கன் ரைஸ் உணவு மாதிரியை எடுத்து, சேலம் உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பினர். இதன் பின்னர் ஓட்டல் உரிமையாளர் ஜீவானந்தம், சிக்கன் ரைஸ் வாங்கிச் சென்ற பகவதி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த, பகவதியின் தாத்தா, சண்முகநாதன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பகவதியின் தாயார் நதியாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை கண்டுகொள்ளாமல் பகவதி அலட்சியமாக நடந்துகொண்டார். இதனையடுத்து உணவு மாதிரியின் பகுப்பாய்வு முடிவில் சிக்கன் ரைசில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்தது உறுதி செய்யப்பட்டதால் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கிச் சென்ற பகவதியிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். அப்போது பகவதி திடீரென நான் தான் உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்தேன் என ஒப்புக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தியதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்தபோது தனது தாயாரும் தாத்தாவும் அதை ஏற்கவில்லை. இதனால், தன்னுடைய குடும்பத்தினருக்கும், பெண்ணின் குடும்பத்தினருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது முதல் தன்னிடம் தாய் நதியா பாசமாக இல்லை என்று தெரிவித்த பகவதி மேலும் ஒரு பெண்ணிடம் உள்ள தவறான பழக்கம், செல் போனில் ஆபாச படங்களை அடிக்கடி பார்த்தது குறித்து தாயும், தாத்தாவும் கண்டித்ததால் அனைவரையும் விஷம் கொடுத்து கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காக நாமக்கல்லில் உள்ள அக்ரோ கடையில் கடந்த 27 ம் தேதியே, விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி வைத்துக்கொண்டேன். பின்னர் 30 ம் தேதி வீட்டிற்கு செல்லும் வழியில் நின்று சிக்கன் ரைஸ் உணவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்தேன் என்றும் அதை இருவர் மட்டுமே சாப்பிட்டார்கள், மற்றவர்கள் சாப்பிடவில்லை என தெரிவித்தார். இதனையடுத்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் பகவதியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர். மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.