பெரம்பலூர் அருகே திட்டப் பணிகளை அமைச்சர் துவக்கி வைப்பு
பெரம்பலூர் அருகே திட்டப் பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார்
போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.2.62 கோடி மதிப்பீட்டில் (23.02.2024) பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சிகளில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து ஏழை எளிய அடித்தட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். பெரம்பலூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் அரசின் திட்டங்கள் அனைத்து பகுதிகளிலும் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
பொதுமக்கள் வைக்கின்ற கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட வேண்டும் பொது மக்களின் கோரிக்கைகள் நேரடியாக அரசு அலுவலர்களை சென்று சேர வேண்டும் என்ற உன்னத நோக்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் இன்று ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் மூலம் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஜெமீன் ஆத்தூர் ஊராட்சியில் ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் கட்டும் பணி, புஜங்கராயநல்லூரில் ரூ.5.00 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி,
கூத்தூர் ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவில் ரூ.3.00 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, இலந்தங்குழி ஊராட்சி சீராநத்தம் தனவேல் வீடு அருகில் ரூ.5.00 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி, அல்லிநகரம் ஊராட்சியில் ரூ.11.00 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி, மேலமாத்தூர் ஊராட்சி பி.சி. தெருவில் ரூ.5.00 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி,
ஆதனூர் ஊராட்சி மதுராகுடிக்காடு கிராமத்தில் ரூ.7.40 லட்சம் மதிப்பீட்டில் பால்பண்ணை முதல் அங்கன்வாடி வரை தார்சாலை அமைக்கும் பணி, கொளக்காநத்தம் ஊராட்சி வன்னிமரம் அருகில் ரூ.5.00 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி என சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.51.40 லட்சம் மதிப்பீட்டில் 08 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா(2022-23) நிதியின் கீழ் ரூ.30.33 லட்சம் மதிப்பீட்டில் ஜெமீன்ஆத்தூர்-அரியலூர் சாலை தார்சாலை அமைக்கும் பணி, கொளக்காநத்தம் ஊராட்சி எஸ்.சி.
தெருவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிய காலனியில் ரூ.18.00 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி என பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் 06 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் மிக விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகளை துரிதமாக மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கீழமாத்தூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டடத்தின்கீழ் ரூ.25.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் , சாத்தனூர் ஊராட்சியில் ரூ.39.95 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டிய கிராம செயலகம் மற்றும் கொளக்காநத்தம் ஊராட்சி நபார்டு திட்டம் மூலம் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிடம் உள்ளிட்டவைகள் என மொத்தம் ரூ. 1.03 கோடி மதிப்பீட்டில் 03 பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளோம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், பொதுமக்கள் நலன் கருதியும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் முறையாக, முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இவ்வாறு தெரிவித்தார்.