தடுப்பு சுவர் அமைக்க வேண்டி நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள் சாலை மறியல்
குமாரபாளையம் ஐயப்பன் கோவில் அருகே தடுப்பு சுவர் அமைக்க வேண்டி புறவழிச்சாலையில் நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம் அம்மன் நகர் பகுதியில் ஐயப்பன் கோவில் வீதி முடிவில், சேலம் கோவை புறவழிச்சாலை சர்வீஸ் சாலை உள்ளது. இதன் ஓரமுள்ள பகுதி யாவும் மண் அரிப்பு ஏற்பட்டு, எந்நேரமும் சாலை உடைந்து, போக்குவரத்து நடக்க இயலாநிலை ஏற்படும். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வசம் பலமுறை நகராட்சி சார்பில் மனு கொடுத்தும், நேரில் சொல்லியும் பலனில்லை. இந்த இடத்தில் பல முறை கார், சரக்கு வாகனம் ஆகியன கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தொடர்ந்து இது போல் அசம்பாவிதம் ஏற்பட்டு பலரும் பாதிக்கப்படும் முன்பு, இங்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி, நகராட்சி தலைவர் த.விஜய்கண்ணன் தலைமையில், சேலம் கோவை புறவழிச்சாலையில் நேற்று காலை 10:30 மணியளவில் சாலை மறியல் நடந்தது. தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் அழகேசன், ராஜ், தர்மலிங்கம், ஜேம்ஸ், உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்த சாலை மறியல் சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் கோவை பக்கமிருந்து வந்த வாகனங்கள் பல கி.மீ. தூரம் வரை வரிசையில் நின்றது. துணை தலைவர் வெங்கடேசன் கூறியதாவது:
பலமுறை கேட்டும் தடுப்பு சுவர் அமைக்கவில்லை என்பதால்தான் இந்த சாலை மறியல் நடந்தது. இந்த சர்வீஸ் சாலையில் 50 க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் மாணவ, மாணவியர்களுடன் காலை மற்றும் மாலை வந்து செல்கிறது. சில நாட்கள் முன்பு கூட ஒரு கார் இதில் கீழே விழுந்து பலரும் காயம் அடைந்தனர். மேலும் இது போல் நடக்க கூடாது என்றுதான் இந்த மறியல் போராட்டம்.
இவ்வாறு அவர் கூறினார்.