தடுமாறி விழுந்தவர் சரக்கு வாகனம் மோதி பலி
குமாரபாளையம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தடுமாறி விழுந்த கூலித்தொழிலாளி மீது சரக்கு வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
Update: 2024-01-11 12:05 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் திருவள்ளுவர் நகரில் வசித்து வந்தவர் குலசேகரன், 32. கூலி. நேற்றுமுன்தினம் இரவு 07:40 மணியளவில் சேலம் சாலை, ஆனங்கூர் பிரிவு சாலை பகுதியில் ஹீரோ ஸ்ப்லேண்டர் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு டூவீலரில் மோதி, நிலை தடுமாறி கீழே விழுந்த போது, டாடா இந்திரா என்ற சரக்கு வாகனத்தின் பின்புற சக்கரம் இவர் தலையில் ஏறி இறங்கியது. இதனால் பலத்த காயமடைந்த இவரை, அக்கம் பக்கம் உள்ளவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த இவரது தாயார் செல்வராணி, 55, நேரில் வந்து, டாக்டரிடம் விசாரித்த போது, வழியில் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து செல்வராணி குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து விசாரணை செய்த போலீசார், விபத்துக்கு காரணமான சரக்கு வாகனத்தின் ஓட்டுனர் சங்ககிரி, புள்ளாக்கவுண்டம்பட்டியை சேர்ந்த, கிரேஷ்குமார், 22, என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள்.