குரண்டியில் கழிவுநீர் கால்வாயை கடந்து உடல் அடக்கம் செய்யும் அவலம்

விருதுநகர் மாவட்டம் குரண்டி பகுதியில் மயானத்திற்கு முறையான சாலை வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடல்களை கழிவுநீர் கால்வாய் வழியாக தூக்கிச்சென்று அடக்கம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2024-01-14 09:54 GMT
கழிவுநீர் கால்வாயை கடக்கும் மக்கள்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள குரண்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குரண்டி கிராமத்தில் உள்ள மயானத்திற்கு முறையான சாலை வசதியில்லையென கூறப்படுகிறது.

மேலும் மயானத்தில் தண்ணீர் வசதி, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் குரண்டி கிராமத்தைச் சேர்ந்த வேலுத்தேவர் (75) என்பவர் நேற்று முன்தினம் (ஜன.10) காலை உடல் நலக்குறைவால் காலமானார்.

இதனையடுத்து உறவினர்களும்,கிராமத்தினரும் இறந்துபோன வேலுத்தேவர் உடலை நேற்றையதினம் (ஜனவரி 11) மயானத்திற்கு எடுத்துச்சென்று அடக்கம் செய்ய தயாராகினர். இந்த நிலையில் குரண்டி கிராமத்தில் மயானத்திற்கு முறையான சாலை வசதியில்லாத காரணத்தால் இறந்தவரின் உடலை கழிவுநீர் கால்வாய் வழியாக பெரும் சிரமத்திற்கு இடையே தூக்கிச்சென்று இறுதி சடங்குகளுடன் அடக்கம் செய்தனர்.

மேலும் கடந்த 10 வருடங்களாக இறந்தவர்களின் உடல்களை இவ்வாறு கழிவுநீர் கால்வாய் வழியாக தூக்கிச் சென்று தான் அடக்கம் செய்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கிராம மக்கள் பெரும் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் அவ்வாறு தூக்கிச் செல்லும் போது கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகவும் கவலையுடன் தெரிவித்தனர். ஆகையால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு விரைவில் மயானத்திற்கு சாலைவசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென்று குரண்டி கிராமப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News